
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதில் சிக்கி பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் கரூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த ஆய்வுக்குழுவின் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, “விஜய்யின் பிரசாரப் பேருந்து நீளமாக இருந்ததால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட அதுவும் காரணம்.
அங்குள்ளவர்களிடம் விசாரிக்கையில் விஜய் பேச ஆரம்பித்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் எதேச்சையாக நடந்த சம்பவம் போல் தெரியவில்லை. பிரசார பரப்புரை நடத்துவதற்கு பெரிய கிரவுண்ட் போல் உள்ள இடத்தை அளித்திருக்கலாம்.
ஆனால் குறுகலான இடத்தில் அனுமதி ஏன் அளிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காரணம் என்றாலும், இந்த இடத்திற்கு காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி அளித்தது ஏன்?
இதற்கு யார் பொறுப்பேற்பார்கள். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததை அறிக்கையாக தலைமைக்கு கொடுக்க உள்ளோம். அவர்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என தெரியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் ‘control’-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!”