
இந்தியாவின் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். 1925-ஆம் ஆண்டு ஹெட்கேவர் என்பவரால் இந்துராஷ்டிரக் கனவுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைகிறது.
அதற்கான நூற்றாண்டு விழா டெல்லியின் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு ரூ.100 நாணயம் மற்றும் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, “ஆர்.எஸ்.எஸ் தேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவர் சிறைக்குச் சென்றார்.
அவருடன் சேர்ந்து, அமைப்பின் பல உறுப்பினர்களும் சிறைக்குச் சென்றனர். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பல சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம்களின் கைகளில் ஆர்.எஸ்.எஸ் துன்புறுத்தப்பட்டது.” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இஸ்ரேலில் உள்ள சியோனிஸ்டுகளும் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-ம் இரட்டை சகோதரர்கள்.”
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த H-1 B விசா கட்டண உயர்வு, இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பணிவான ஊழியர் என்பதைக் காட்டுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்கு பூட்டி கொண்டு வந்தபோதும், விசா கட்டணங்களை அதிகரித்தபோதும் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த நாடு சுயமரியாதை மிக்க ஒருவரின் ஆட்சியில் இருக்கும் தேசமாக இருந்தால் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களைதான் நாம் பார்க்கிறோம்.
ட்ரம்ப் இந்தியப் பொருட்களின் மீது வரிகளை உயர்த்தியபோதும் மோடி எதுவும் பேசவில்லை. ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறோம் என்ற பெயரில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருக்கிறார்.
இது இந்தியர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். நமது அரசியலமைப்பிற்கு பெரும் அவமானம். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி, காலனித்துவ உத்தியுடன் இணைந்த, பிரிவினைவாத சித்தாந்தத்தை ஊக்குவித்த ஒரு அமைப்பை இது சட்டப்பூர்வமாக்குகிறது.
நமது உண்மையான சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த மதச்சார்பற்ற, ஒன்றுபட்ட இந்தியாவின் நினைவின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்றார்.