
உலக பணக்காரர்கள் பற்றிய விபரத்தை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக நடிகர் ஷாருக்கான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்துடன் ஷாருக்கான் இருந்து வருகிறார். தற்போது புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் ஷாருக்கானுக்கு ரூ.12,490 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட் நடிகர்கள் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் டாம் குரூஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி உலகின் மிகவும் பணக்கார நடிகர் என்ற அந்தஸ்துக்கு முன்னேறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஷாருக் கானுக்கு 870 மில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த சொத்து ஒரு ஆண்டில் 1.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. ஷாருக் கான் கடந்த 30 ஆண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாது, படத்தயாரிப்பு, ஸ்டூடியோ, கிரிக்கெட் அணிகள், மத்திய கிழக்கு நாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு என தன் தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறார். இதனால் அவரது சொத்து கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஷாருக் கானின் தொழில் பார்ட்னர் ஜுஹி சாவ்லாவின் குடும்பத்திற்கு ரூ.7790 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஜுஹி சாவ்லா இந்திய பணக்கார நடிகர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜுஹி சாவ்லா நடிகர் ஷாருக்கானின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியில் முக்கிய பங்குதாரர். நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ரூ.2160 கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தற்போது நடிகர் ஷாருக் கான் தனது மகள் அறிமுகமாகும் `கிங்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதே போல் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து மீண்டும் முகேஷ் அம்பானிக்கு கிடைத்து இருக்கிறது. ரூ.9.55 லட்சம் கோடி சொத்துடன் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தில் இருக்கிறார். அவரது போட்டியாளரான கெளதம் அதானி ரூ.8.15 லட்சம் கோடி சொத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு கெளதம் அதானி ரூ.11.6 லட்சம் கோடி அளவுக்கு சொத்துடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் பங்குச்சந்தை சரிவு காரணமாக அந்த சொத்தின் மதிப்பு குறைந்திருக்கிறது.
2021ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார். 2022ம் ஆண்டு அந்த இடத்தை அதானி பிடித்தார். 2023ம் ஆண்டு மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு வந்தார். 2024ம் ஆண்டு மீண்டும் அதானி அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். தற்போது அந்த இடத்தை முகேஷ் மீண்டும் அம்பானி பிடித்துக்கொண்டார். ரோஷ்னி நாடார் இந்த ஆண்டு மிகப்பெரிய பணக்கார பெண் என்ற அந்தஸ்தை பிடித்து இருக்கிறார். அவருக்கு ரூ.2.84 லட்சம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் ஆயில் எடுக்கும் தொழிலை பிரதானமாக செய்து வருகிறார். இதே போன்று கெளதம் அதானி விமான நிலையங்கள், துறைமுகங்களை இயக்குவதோடு, மின் உற்பத்தி துறையிலும் ஈடுபட்டுள்ளார். இரண்டு பேரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.