
நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை , ” வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அரசியல் செயவதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன.

அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டுமல்லவா. கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. இது போன்று பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளார்” என்றார்.