• October 2, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவை கோலாகமாக கொண்டாடுவது வழக்கம். நவராத்திரியையொட்டி மும்பையில் உள்ள மாட்டுங்கா, செம்பூர், டோம்பிவலி, வாஷி போன்ற நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்களது இல்லங்களில் கொலுவைத்து இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமான தீம்களில் கொலுவைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்களது இல்லத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து கொலுவை பார்த்து சென்றனர்.

ரேவதி வேணுகோபால் இல்லம்

செம்பூரில் வசிக்கும் ரேவதி வேணுகோபால் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கொலு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. ரேவதி வேணுகோபால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமை மையமாக வைத்து கொலு வைப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர் முருகனின் அறுபடை வீடுகளை தனது இல்லத்தில் கொலுவாக வைத்திருந்தார். ரேவதி வேனுகோபால் வீட்டின் முன் அறை முழுக்க கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. வீட்டின் நுழைவு வாயிலை சாமி சிலைகளால் அலங்கரித்து அனைவரையும் வரவேற்கும் வகையில் இருந்தது.

குர்லா சுரேந்திரன் இல்லம்

வழக்கமாக அனைத்து கொலு பொம்மைகளும் வெளியில் இருந்து வாங்கப்படுவது வழக்கம். ஆனால் ரேவதி தனது வீட்டில் முருகனின் அறுபடை வீட்டை தனது கைகளால் செய்து இருக்கிறார். அதுவும் ஆறு மாதங்கள் இதற்காகவே கடுமையாக உழைத்து தனது வீட்டையே கோயில் போன்று மாற்றி இருந்தார்.

இதே போன்று செம்பூர் நாக்கா பகுதியில் வசிக்கும் ரேகா ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமாக யாருமே வைக்காத ஒரு தீமை பயன்படுத்தி கொலு வைத்திருந்தார். அவர் ராமரின் பதாகையை மையமாக வைத்து இக்கொலு பொம்மைகளை வடிவமைத்து இருந்தார்.

ரேகா ராதாகிருஷ்ணன் இல்லம்

ராமரின் பதாகையை அவரது தம்பி பரதன் வாங்கிச்செல்வது போன்ற காட்சியை தத்ரூபமாக பொம்மை வடிவத்தில் கொண்டு வந்திருந்தார். இது தவிர மரப்பாச்சி பொம்மைகளும் காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொலுவை காண்பதற்காக வரும் பெண்களுக்கு வழக்கமாக கொடுக்கும் நினைவு பரிசுகளை கொடுக்காமல் பதாகை தீமை வலியுறுத்தும் விதமாக கால்களில் வரக்கூடிய வெடிப்புகளுக்கு தடவக்கூடிய மருந்துகள் அடங்கிய மினி பேக் ஒன்றை வழங்கினார்.

இக்கொலுவை வைக்க தனது கணவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருமகள், மகள் மிகவும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்தார். 40 ஆண்டுகளாக அவர் தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். இதே போன்று கல்யான் பகுதியில் வசிக்கும் புவனா வெங்கட் தனது மகள் மற்றும் கணவர் இந்த முறை வைத்திருந்த கொலுவில் இந்தியா முழுவதும் இருந்து வாங்கி வரப்பட்ட பொம்மைகள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து புவனா வெங்கட் கூறுகையில்,”நாங்கள் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அங்கு பிரபலமான பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம். நான் மட்டுமல்லாது எனது மகளும் இதே போன்று எங்கு சென்றாலும் பொம்மைகளை வாங்கி வருவர்.

புவனா வெங்கட் இல்லம்

பார்வதி தேவி அனைத்திலும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவுகூறும் வகையில் கொலுவில் கடவுள்கள் மட்டுமல்லாது, விலங்குகள் உட்பட அனைத்து வகையான பொம்மைகளும் இடம் பெறுகிறது”என்று தெரிவித்தார்.

ஹேமா கண்ணன் இல்லம்

கோவண்டி ஹேமா கண்ணன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொலுவில் மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் உள்ள அம்மன் பிரதானமாக இடம் பெற்று இருந்தது. செம்பூர் சித்ரா ராமனும் கொலு பொம்மைகளால் தனது ஒட்டுமொத்த வீட்டையும் அலங்கரித்து இருந்தார். இது தவிர சண்முகானந்தா சபா, செம்பூர் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஹால் போன்ற பகுதியிலும், தாராவியிலும் கொலுவைக்கப்பட்டு இருந்தது. தாராவியில் முருகன் பக்த சபா சார்பாக பெண்கள் கொலுவைத்திருந்தனர். மும்பையில் பல்வேறு அமைப்புகள் கொலு போட்டிகளையும் அறிவித்து இருந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *