
தேனி, பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்களை ஆசிரியர்களே யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்களுக்கு வண்டிகளில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “ சில்வார்பட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாலை வேளைகளில் கால்பந்து விளையாடுவோம். அப்படி மாலையில் வந்த பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் பியூன் விஜயன் இருவரும் எங்களை இன்று மட்டும் விளையாட வேண்டாம் எனச் சொல்லி கிளம்ப சொன்னார்கள்.
எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காகப் மறைந்திருந்தோம். அப்போது ஒரு டெம்போ மற்றும் இரண்டு பைக்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளிக்குள் வந்தனர்.
பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் பாரதிராஜா அவர்களிடம் பேசி, பள்ளியில் உள்ள புத்தக பண்டல்களை எடுத்து டெம்போவிற்குள் ஏற்றினார். உள்ளே நடந்ததை நாங்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்தோம். நாங்கள் வீடியோ எடுத்ததைப் பார்த்த அந்த ஆசிரியரும் டெம்போவில் வந்திருந்தவர்களும் உடனே வண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாகச் சென்று விட்டனர்.
மேலும் நாங்கள் எடுத்த வீடியோவை நீக்குமாறும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும், இது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் சொல்லி ஊர்க்காரர் ஒருவர் எங்களுடன் பேசினார்.

நாங்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்” என்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆசிரியர் பாரதிராஜா மற்றும் தூய்மை பணியாளர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றனர்.