• October 1, 2025
  • NewsEditor
  • 0

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது.

இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.

அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி எனக் குறிப்பிட்டுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் நிறுவினார்.

ராகுல் காந்தி

இந்த விவகாரம் விவாதப் பொருளானது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலின் இறுதிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு முன்பு, ஜூன் 24, 2025 நிலவரப்படி மாநிலத்தில் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆகஸ்ட் 1, 2025 அன்று வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது, ​​7.24 கோடி பெயர்கள் இருந்தனர்.

இதன் அடிப்படையில் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இறுதி வரைவு வெளியிட்ட பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “22 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவடைந்தது.

பீகார் வாக்காளர்கள், அதிகாரிகள், பூத்-லெவல் முகவர்கள் மற்றும் பீகாரில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் சிங், “தகுதியுள்ள எவரேனும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

 சுக்பிர் சிங் சந்து,  ஞானேஷ் குமார் ,  விவேக் ஜோஷி
சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார் , விவேக் ஜோஷி

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது தொடர்பான தேர்தல் பதிவு அதிகாரியின் முடிவில் திருப்தி அடையவில்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 24-ன் கீழ், மாவட்ட நீதிபதியிடம் முதல் மேல்முறையீட்டையும், தலைமை நிர்வாக அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம்(யு) எம்எல்சி மற்றும் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், “எதிர்க்கட்சிகள் ‘வாக்கு சோரி (வாக்கு திருட்டு)’ என்ற முழக்கத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக விரலை உயர்த்தின.

இப்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பீகாரில், அதிகபட்ச மக்கள்தொகை பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

பீகாரின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன், “பூத்-லெவல் ஏஜெண்டுகள் மற்றும் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு, SIR முடிந்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியாகும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *