
ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.
இஸ்ரேல் – காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் ஹவுத்திகள் குழு டச்சு வணிகக் கப்பலுக்குத் தீ வைத்திருக்கிறது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைக்கக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும், கருவிகளையும் பயன்படுத்துவோம் என எச்சரித்திருக்கிறது.
இது ஏடன் வளைகுடாவில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலாகும். 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் – காசா இடையே போர் தொடங்கியது.
அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 2023 முதல் ஹவுத்திகள் இஸ்ரேல், அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்து வருகின்றனர். 2023 முதல் இப்போது வரை நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஹவுத்தி ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, “மினர்வாக்ராட்டைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கப்பல் ஏவுகணையை ஹவுத்திகள் ஏவினர்.
இந்தத் தாக்குதலில் மினர்வாகிராட் கப்பலிலிருந்த 19 பேரில் 2 கடற்படையினர் காயமடைந்தனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காசாவில் நடந்த போருக்குப் பதிலளிக்கும் விதமாக ஹவுத்திகள் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீதும் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹவுத்திகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதை மீறிச் செயல்படுவதாகக் குறிப்பிடும் ஹவுத்திகள் தாக்குதலில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.