
சமீபத்தில் திரையுலகில் 38 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அக்ஷய் குமார், தனது தொழிலில் இவ்வளவு நாட்கள் வெற்றியுடன் இருப்பதற்கு உதவிய தனது பழக்க வழக்கங்கள் பற்றி மனம் திறந்துப் பேசியிருக்கிறார்.
நடிகர் அக்ஷய் குமார் சாப்பாடு விசயத்திலும், உடல் நலத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அக்ஷய் குமார் தனது பேட்டியில், ”உணவுக் கட்டுப்பாடு விவகாரத்தில் எனக்கு நானே விதிகளை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த விதிகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது கிடையாது. பார்ட்டிகளுக்குச் சென்றால் கூட இதனைப் பின்பற்றுகிறேன்.
பார்ட்டிகளுக்குச் சென்றால் குடிப்பது போன்று அல்லது கேக் சாப்பிடுவது போன்று நடிப்பேன். எனது உடல் நலத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பேன். மாலை 6.30 மணிக்கு முன்பு நானும் வழக்கமான மனிதனாகத்தான் இருப்பேன். பகல் நேரத்தில் சோலேபூரி, சிலேபி, பர்பி என அனைத்தையும் சாப்பிடுவேன்.
ஆனால் மாலை 6.30 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவதில்லை. தனது வெற்றிக்குப் பெரும்பாலும் ஒழுக்கம் மட்டுமல்லாது அதிர்ஷ்டமும் காரணம் ஆகும். என்னை விட அழகாகவும், திறமையாகவும், தகுதியுடனும் பலர் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அங்குதான் அதிர்ஷ்டம் உண்மையில் வருகிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். வெற்றி என்பது 70% அதிர்ஷ்டமும் 30% கடின உழைப்பும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளியான LLB 3 படம் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.