• October 1, 2025
  • NewsEditor
  • 0

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறார் சிவநேசன் (ராஜ் கிரண்). கையால் மாவு அரைத்து சிவநேசன் சுடும் இட்லிக்கு ஊரே அடிமை. இந்நிலையில், கேட்டரிங் படித்த அவரது மகன் முருகன் (தனுஷ்), அவரது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பாங்காக்கில் வேலை செய்யக் கிளம்புகிறார்.

பாங்காக்கில் AFC என்ற நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் அவர், அந்த நிறுவன உரிமையாளரின் (சத்யராஜ்) மகளை (ஷாலினி பாண்டே) திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால் முருகன் மீண்டும் தன் கிராமத்துக்கு வரும் சூழல் உண்டாகிறது. ஊருக்கு வரும் முருகன் எடுக்கும் முடிவு என்ன, அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதே இந்த ‘இட்லி கடை’.

Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்

‘அகிம்சையைப் பெரிய ஆயுதமாக’க் கொண்டு தந்தையின் வளர்ப்புக்கு ஏற்ப பொறுமையையும், ‘அந்தப் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பொங்கி எழும் இடங்களில் ஆக்ஷனையும் கலந்து, கிராமத்து மனிதராகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் தனுஷ்.

திமிரும் செருக்கும் கலந்த உருவமாக அருண் விஜய் தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார். 

எண்ணெய்யில் போட்ட கடுகாகத் துருதுருப்பாக வெடித்து, நம் மனதைக் கவர்கிறார் நித்யா மேனன். இருப்பினும், இறுதிக் காட்சியில் ‘வெட்டு’ என்று அரிவாளைக் கொடுக்கும் இடத்தில் வசன உச்சரிப்பு, எண்ணெய்யில் கலந்த தண்ணீர் போலக் காட்சியோடு ஒட்டவில்லை.

ராஜ் கிரண் படத்தின் ஆன்மாவாக மிளிர்கிறார். பிற்பாதியில் கனமாகும் தங்களின் பாத்திரத்துக்கு நல்லதொரு நடிப்பை நல்கியிருக்கிறார்கள் ஷாலினி பாண்டேவும், இளவரசுவும்!

சத்யராஜ், பார்த்திபன், கீதா கைலாசம் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். சமுத்திரக்கனியின் வில்லனிசத்தில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் சேர்ந்திருக்கலாம்.

Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்
Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்

கிராமத்தின் அழகியலை மிக நேர்த்தியாக, கவிதை போலக் காட்டியிருக்கிறது கிரண் கௌசிக்கின் கேமரா கண்கள். குறிப்பாக, கனவுக் காட்சிகளும், விடியற்பொழுதுக்கு வழங்கப்பட்ட ஒளியுணர்வுகளும் கவனிக்க வைக்கின்றன. இவற்றைத் தொந்தரவு செய்யாமல், படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.கே. பிரசன்னா.

இருப்பினும், இரண்டாம் பாதியில் இட்லியை வெகு நேரம் வேகவைத்ததைக் குறைத்திருக்கலாம்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் தனுஷ் பாடிய ‘என்ன சுகம்’ பாடலும், ‘எத்தன சாமி’ பாடலும் நம் மனதைக் கவர்கின்றன.

பின்னணி இசையில் ‘பீல் குட்’ உணர்வைத் தர முயன்றிருக்கிறார். அக்காலத்துக் கிராமத்து வீடுகள், இட்லிக் கடை ஆகியவற்றில் கலை இயக்குநர் ஜாக்கியின் உழைப்பு தெரிகிறது.

நடிகர் மற்றும் இயக்குநர் என்ற இரட்டைப் பொறுப்புடன் தனுஷ் சுட்டிருக்கும் இந்த இட்லி, தமிழ் சினிமா ஏற்கெனவே பலமுறை அரைத்த மாவில் வெந்த இட்லிதான்!

Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்
Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்

கிராமத்து வாழ்வியல், சொந்த ஊர், அப்பாவின் தொழில் எனப் பலவற்றை இணைத்து ஒரு ‘பீல் குட்’ டிராமாவைத் தர முயன்றிருக்கிறார். அது ஆங்காங்கே ரசிக்கும்படியாக இருந்தாலும், சில இடங்களில் ‘க்ரிஞ்ச்’ மீட்டரையும் அதீத நாடகத் தன்மையையும் தொட்டுச் செல்கிறது.

அதேபோல், நவீனத்தை ஏற்றுக்கொள்ளாமல் பழமைவாதத்தைப் புகழ்ந்து பேசுவது போன்ற வசனங்கள் நம் கண்களை வேண்டுமானால் குளமாக்கலாம். ஆனால், நடைமுறையில் வளர்ச்சி என்ற மீனை அதில் பிடிக்க முடியாது என்பதே நிதர்சனம்!

இரண்டாம் பாதியில் இளவரசு, நித்யாமேனன் ஆகியோரின் ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கின்றன. ‘லாஜிக் பார்க்காதீங்க, பேரன்பைப் பாருங்கள்’ என்றாலும், லாஜிக் மீறல்கள் ‘ஓவர் டோஸ்’!

சத்யராஜ் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதத்தில் இருக்கும் குழப்பங்களும் இதற்கான பிரதான காரணம்.

Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்
Idly Kadai review | இட்லி கடை விமர்சனம்

இறுதிக் காட்சிகள் நெருங்க நெருங்க, அகிம்சையைச் சுற்றி வரும் தொடர் காட்சிகள் ஒரே மாதிரியான உணர்வோடு சுழன்று, நம்மிடமும் அதே அகிம்சையையும் பொறுமையையும் எதிர்பார்க்கிறது.

மொத்தத்தில், தொழில்நுட்ப ரீதியாக, நடிப்பாக ஒரு நல்ல விருந்து தந்தாலும், திரைக்கதையாக எதிர்பார்த்த ருசியைத் தரவில்லை இந்த ‘இட்லி கடை’.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *