
கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பொருளாளரைக் கைது செய்துள்ளது. மேலும் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், முன் ஜாமின் வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன் தினம் இரவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z கலவரத்தைச் சுட்டிக்காட்டி வன்முறையைத் தூண்டும்விதமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அதை நீக்கவும் செய்திருக்கிறார்.

எனினும் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு இணையத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்தநிலையில் அவர்மீது, வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் BNS பிரிவுகள் 192 கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டது, 196(1)(b) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயல், 197(1)(d) இந்திய இறையாண்மை, 353(1)(b) ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பது, 353(2) பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் அறிக்கைகள், வதந்திகளைப் பரப்புவது, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலைப் பகிர்வது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “என் வாழ்க்கையில் என்னுடைய அம்மாவின் இழப்புக்குப் பிறகு, என்னுடைய 41 குடும்பங்களின் இழப்பு மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கிறது. இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கூடிய சீக்கிரம் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திப்போம். அவர்களுடன் மிகப் பெரிய பயணம் தொடரும்” எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.