
‘பவர் பாண்டி’ என்ற படத்தின் மூலம் தன்னை ஒரு திறன்மிகு இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்ட தனுஷ், அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற இரு படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார். ஆனால், இந்த இரு படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து, தமிழில் எப்போதுமே மினிமம் வெற்றிக்கு உத்தரவாதம் தரும் ‘குடும்ப சென்டிமென்ட், கிராமத்துப் பின்னணி, தந்தையின் கனவை நிறைவேற்றும் மகன் என்ற கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் தனுஷ் அதில் வெற்றி பெற்றாரா என்று பார்க்கலாம்.
கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்), வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன.