• October 1, 2025
  • NewsEditor
  • 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்று மனைவி இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்த முதியவர் தனது 75 வயதில் தனக்கு துணை தேவை என்று 35 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் என்ற கிராமத்தில் வசித்தவர் சங்குராம்(75). இவர் தன் மனைவி ஒரு வருடத்துக்கு முன்பு இறந்த பிறகு தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் தானே விவசாயம் செய்து, தானே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.

அவருக்கு குழந்தைகள் கிடையாது. உறவினர்கள் அனைவரும் டெல்லியில் வசித்து வந்தனர். இதனால் சமையல் மற்றும் அத்தியாவசிய பணிகளை கவனிக்கவும், தன்னை கவனித்துக்கொள்ளவும் ஒரு துணை தேவை என்று சங்குராம் கருதினார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த முதியவர் பெண் தேட ஆரம்பித்தார்.

அருகில் உள்ள ஜலல்பூரைச் சேர்ந்த 35 வயது மன்பாவதி என்ற பெண்ணின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இருவரும் பேசிப் பழகியதில் முதியவரைத் திருமணம் செய்துகொள்ள மன்பாவதி சம்மதம் தெரிவித்தார். ஆனால் இத்திருமணத்திற்கு சங்குராம் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் முதியவர் மன்பாவதியை கோர்ட் மூலம் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு உள்ளூர் கோயில் ஒன்றில் பாரம்பரிய சடங்குகள் செய்தும் திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு முதலிரவில் புதுமணத் தம்பதி தங்களது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று பேசிக்கொண்டனர். மன்பாவதி தான் வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக்கொள்வதாக தன் கணவரிடம் தெரிவித்தார். சங்குராம் தான் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாக தெரிவித்தார். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் முழுமையான வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

இரவு முழுவதும் எதிர்காலம் குறித்து பேசினர். காலையில் திடீரென சங்குராமின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். திருமணமான அடுத்த நாள் காலையில் முதியவர் இறந்திருப்பது கிராமத்தினர் மத்தியில் பல்வேறு விதமான விவாதங்களை எழுப்பியிருக்கிறது. சிலர் இது இயற்கையான மரணம் என்று தெரிவித்துள்ளனர். சிலர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மன்பாதேவி கூறுகையில்,” இரவு முழுவதும் எப்படி வாழவேண்டும் என்று இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். என்னிடம் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாக சொன்னார். அதிகாலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது”என்று தெரிவித்தார். டெல்லியில் உள்ள சங்குராம் உறவினர்கள் இறுதிச்சடங்குகளை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

தங்களது முன்னிலையில்தான் இறுதிச்சடங்கு நடைபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். திடீர் மரணம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா, போலீஸார் விசாரித்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *