
சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அக்.28-ம் தேதி்க்கு ஒத்திவைக்கப்படுவதாக, டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் பெரியசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி தேசிய செயலாளர் மூர்த்தி, டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜன் மற்றம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அக்.2 ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் மற்றும் விதிப்படி பணி செய்யும் இயக்கத்தை அறிவித்திருந்தது. கடந்த 26ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அமைச்சர் முத்துசாமி சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசி தீர்வு காணலாம் என தெரிவித்தார்.