• October 1, 2025
  • NewsEditor
  • 0

காசி, நம் தேசத்தின் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலம். அத்தலத்துக்கு நிகரான பல்வேறு தலங்கள் தேசமெங்கும் உள்ளன.

தமிழகத்தில் உள்ள தென்காசி, திருக்காஞ்சி ஆகிய தலங்கள் இதற்கு உதாரணம். ஈசன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் என்பதை அவர் தம் அடியவர் மூலம் வெளிப்படுத்திய தலபுராணங்கள் பல உண்டு. அப்படி மகிமை பொருந்திய காசிக்கு நிகரான ஒரு தலம்தான் சிவகாசி.

அப்படிப்பட்ட சிவகாசியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் வெம்பக்கோட்டை. இதுவும் காசிக்கு இணையான தலமே என்கிறார்கள் பக்தர்கள்.

காசியில் கங்கை உத்தரவாகினியாக ஓடுவது போன்று, இந்தத் தலத்தின் அருகில் பாயும் வைப்பாறும் உத்தரவாகினியாகப் பாய்கிறது.

அத்துடன், காசியில் உள்ளது போன்றே இங்கேயும் கோயிலுக்கு நேராக மயானம் அமைந்திருக்கிறது. ஆகவே, இவ்வூரை காசிக்கு நிகராகப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

வெம்பக்கோட்டை சிவாலயம்

இத்தலத்தில் ஈசன் மீனாட்சியம்மையுடன் சொக்கலிங்க ஸ்வாமியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு காலங்களில், முதல் மூன்று நாள்கள், காலையில் சூரியன் தன் கிரணங்களால் சுவாமியைத் தழுவி வழிபடும் காட்சி இத்தலத்தின் பெருமையை மேலும் உணர்த்தும்.

கோயில் வரலாறு

சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. பின்னர் வந்த காலங்களில் – சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மேட்டுக்காடு, நத்தத்து மேடு என்னும் குறுநிலங்களாகப் பிரிந்திருந்தது.

அத்தருணம் நத்தத்துமேடு என்னும், இத்தலம் அமைந்த பகுதியினை செம்புலிங்கராஜா என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.

அவருக்குப் பின், அவரது தத்துப்பிள்ளைகளான கண்டியச் சேதுபதியும், பாண்டியச் சேதுபதியும் இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர்.

இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் குதிரையில் பயணப்பட்டு மதுரை சென்று, அங்கு அருள்புரியும் மீனாட்சி அம்மனைத் தரிசித்த பின்பே காலை உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அப்படியொரு நாள், இருவரும் மதுரைக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்க, செல்லும் வழியில் இருந்த அர்ஜுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டது.

பல நாழிகை காத்திருந்தும் வெள்ளம் வடியாததால், மனம் சோர்வுற்ற மன்னர்கள் இருவரும் களைப்பில், அருகிலிருந்த மரத்தடியில் படுத்து உறங்கினர்.

வெம்பக்கோட்டை மீனாட்சி
வெம்பக்கோட்டை மீனாட்சி

அப்போது அவர்களின் கனவில் தோன்றிய அம்பாள், ‘இனி என்னைத் தேடி மதுரை வரவேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியிலேயே வெண் புற்கள் அதிகம் வளர்ந்த காட்டில் என் கோயில் இருக்கிறது.

அதை அடையாளம் காட்ட நீங்கள் அங்கே செல்லும்போது கருடன் வட்டமிடுவார். அந்த இடத்தில் தோண்டிப்பாருங்கள் என் கோயில் கிடைக்கும்.

அங்கே நானும் ஈசனும் கோயில்கொண்டுள்ளோம். அந்த ஆலயத்தை மீட்டு மீண்டும் பூஜைகளைத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை முழுவதும் உற்ற துணையாக இருப்பேன்” என்று கூறி மறைந்தாள்.

இருவரும் விழித்தெழுந்ததும் தமக்குள் தாம் கண்ட கனவினைப் பற்றிச் சொல்லி இருவருக்கும் ஒரே கனவு என்பதை அறிந்துகொண்டனர்.

உடனடியாக அம்பாள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று கருடன் வட்டமிடுவதைப் பார்த்து அந்த இடத்தைத் தோண்டச் செய்தனர். அவர்களின் முன்னோர்களான பாண்டிய மன்னர்கள் கட்டிய அற்புதமான கோயில் வெளிப்பட்டது.

அங்கே ஈசனையும் மீனாட்சி அம்பிகையையும் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். திருப்பணி செய்து இன்றளவும் அக்கோயில் நிலைத்திருக்க வழி செய்தனர்.

இந்த ஆலயத்தின் தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திருத்தலம் இருக்கும் பகுதி ‘யானைப் புற்கள்’ எனப்படும் வெண்ணிறப் புற்கள் அதிகம் இருந்ததால் இதை ஆரம்பத்தில் ‘வெண்புல் கோட்டை’ எனும் பெயரிட்டு அழைத்தனர். அதுவே நாளாக நாளாக மருவி ‘வெம்பக்கோட்டை’ ஆனது.

வழிபாட்டுச் சிறப்புகள்

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், 48 நாள்கள் தினமும் இங்கு தொடர்ந்து வந்து, இங்குள்ள இறைவனை வேண்டிச் செல்ல, தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

இது தவிர, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பெளர்ணமி பூஜையில் கலந்துகொண்டு அம்மையை வேண்டிக்கொண்டால், திருமண வரம் வேண்டுபவர்களுக்கு சீக்கிரம் வரன் அமையும் என்பது நம்பிக்கை.

மேலும், ‘இந்தக் கோயிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதி எவ்வித சண்டை-சச்சரவுகளிலும் ஈடுபடாமல், காலம் முழுக்க மனம் ஒருமித்து வாழ்வார்கள்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

வெம்பக்கோட்டை சொக்கநாதர்
வெம்பக்கோட்டை சொக்கநாதர்

நவராத்திரி, வைகாசி விசாகம், பெரிய கார்த்திகை ஆகிய தினங்கள் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் இரு வேளை பூஜை மற்றும் ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு நாளும் இத்தலத்தின் நடை, காலை 6 மணியிலிருந்து 9.30 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையிலும் திறந்திருக்கும். மற்ற விசேஷ தினங்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *