
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். நம் நாட்டில் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்ட செயலிகள் ஏராளமான முதலீட்டாளர்களின் கோடிக் கணக்கான பணத்தை மோசடி செய்ததுடன் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தகைய செயலிகளை மறைமுகமாக ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவண் மற்றும் சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை நடத்தினர்.