
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘வீர தமிழச்சி’. இதில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சுரேஷ் பாரதி பேசும்போது, ‘‘கட்டிடத் தொழிலாளியாக ரூ.35 சம்பளத்தில் வேலை செய்த நான், இன்று இயக்குநராக உயர்ந்துள்ளேன். 2016-ம் ஆண்டு ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் குறும்படத்தை இயக்கினேன். அது சிறந்த விழிப்புணர்வு குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருது பெற்றேன். 18 குறும்படங்களை இயக்கியுள்ளேன். 36 விருதுகளை வென்றிருக்கிறேன்.