
கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.
அதன்படி, ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வந்தனர். அவர்கள், வேலுசாமிபுரத்தில் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவர்கள் கூறுவதைக் கேட்டு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சியினர் சரியான இடங்களை தேர்வு செய்யவேண்டும்.