
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், “சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செய்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம்.” என்று மாணவர்களிடையே பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும், “மனிதர்கள் ‘socio political animal’ என்று சொல்வார்கள். ‘Political’ அப்படி என்றால், தேர்தல் அரசியல் கிடையாது. நாம் யார், எந்தச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வோடு இருப்பது ரொம்ப முக்கியம்.”
நாம் எதை இலக்காக வைத்துக்கொள்ளப்போகிறோம், எதை நோக்கிப் பயணிக்கப்போகிறோம், எதற்காகப் பின்னால் போகப்போகிறோம், யார் பின்னால் போகப்போகிறோம், அவர் சரியான ஆளா என எல்லாமே நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் எது சரி? எது தவறு? எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது என்று தெரிந்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள், படியுங்கள், வாசியுங்கள்.
இந்தச் சமூகம் இன்றைக்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது, சமூகத்தை இயங்க வைப்பது எது? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், ரொம்ப விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுவோம்.” என்று பேசியிருக்கிறார்.