
திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏந்தல் புறவழிச்சாலை வழியாகச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சகோதரிகள் இருவரை மடக்கி மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் சாமி தரிசனத்துக்காக திருவண்ணாமலைக்கு வந்துவிட்டுத் திரும்பியவர்கள் எனக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், இருவரையும் அங்குள்ள தோப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு வைத்து சகோதரியின் கண்ணெதிரிலேயே அவரின் தங்கையான இளம்பெண்ணை மிரட்டி இரு காவலர்களும் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரு காவலர்களும் அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அவரின் சகோதரியின் மூலமாக மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இது குறித்து உடனடியாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகாரளித்திருக்கின்றனர். அதிர்ச்சிக்குள்ளான போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும்.
இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்தப் பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் தி.மு.க அரசு தலைகுனிய வேண்டும்.

மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், “தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்தக் குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சட்டம்-ஒழுங்கை பேணிக்காத்து, மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.