• September 30, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்தியா மட்டுமல்லாது கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இக்கும்பல் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. அடிக்கடி கனடாவில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மற்ற கேங்குடன் துப்பாக்கிச்சுடு நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

அதோடு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரை தீவிரவாதிகளாக அறிவித்து இந்தியா தேடும் நபர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய்

ஆனால் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வந்தது. அதனைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கனடாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் உறவு மேம்பட ஆரம்பித்து இருக்கிறது. இதையடுத்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரை கனடா அரசு தீவிரவாதிகளாக அறிவித்து இருக்கிறது. இதனால் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினருக்கு கனடாவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து இருக்கிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரின் சொத்துக்களைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அனுபவித்தாலோ அல்லது கையாண்டாலோ அது குற்றமாகக் கருதப்படும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய்
லாரன்ஸ் பிஷ்னோய்

இது குறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ”தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடாவில் இடமில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் கனடா மக்களையும் மிரட்டி பணம் பறிப்பதாகவும், அரசியல், மத காரணங்களுக்காகச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், கனடா மற்றும் வெளிநாடுகளில் செய்த குற்றச்செயல்களை அவர்களே ஒப்புக்கொண்டு இருப்பதால் அவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு எம்.பி பிராங்க் கோரிக்கை விடுத்து இருந்தார்.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு கொலை செய்யப்பட்டபிறகுதான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் குறித்து சர்வதேச அளவில் தெரிய வந்தது. இந்தியாவில் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா, மும்பையில் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபாசித்திக் ஆகியோரை லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் சுட்டுக்கொன்றது.

அதோடு சல்மான் கான் வீட்டின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரது ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *