• September 30, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும் தனியார் மூலம் சீர் செய்யப்படுகின்றன. மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் பல வார்டுகளுக்கு முழுமையாக தாமிரபரணி குடிநீர் கிடைக்கவில்லை.

கழிவு நீர் வடிகால் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக வாங்கப்பட்ட 2 ஜெட் ராடர் வாகனங்களிலும் பழுது ஏற்பட்டுள்ளன.

புதை சாக்கடையில் மண் அள்ளும் வாகனங்களும் பழுதாகி நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளும் சரிவர நடைபெறவில்லை. இப்படி ஏராளமான அடிப்படைப் பிரச்னைகள் உள்ளன.

விருதுநகர் நகராட்சி

ஆனால், விருதுநகர் நகராட்சியில் செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெறவில்லை. இதனால், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை கூட்டங்களில் பேசி தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், “ஆணையாளர் சுகந்தி, கோவில்பட்டி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக விருதுநகர் நகராட்சியைக் கவனித்து வருகிறார். பொறியாளர் உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளார்.

இன்றுதான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இதன் காரணமாக மன்ற பொருள் ஏதும் தயார் செய்யவில்லை. எனவே, கூட்டம் நடத்தவில்லையெனத் தெரிவிக்கின்றனர். நகராட்சியில் மாதத்தில் ஒருநாள் அவசியம் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால், அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூட்டம் நடத்தாமல் இருப்பது நியாயமல்ல.

இது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர், இப்பிரச்னையில் உடனடியாகத் தலையீடு செய்து மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *