
‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது.
‘யாத்திசை’ படத்திற்குப் பிறகு தரணி ராஜேந்திரன் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு நேற்று (செப்.30) அறிவித்திருக்கிறது.
சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
இது தொடர்பாக தரணி ராசேந்திரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “சசிகுமார் அண்ணன் நான் தற்போது இயக்கி வரும் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நான் அவரை அந்தக் கதாபாத்திரத்திற்காக அணுகியபோது, மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் என்னை ஊக்கப்படுத்தினார்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் என் வளர்ச்சிக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

‘இப்போ என்னடா. சரி போ, நீ நல்லா பண்ணு. என்ன சொல்லுறியோ நடிச்சு தரேன். எப்போ வரணும் சொல்லு’. இந்தப் பதிலே நான் அவரைச் சந்திக்கும் போது வந்தது.
உண்மையான எளிமையான மனிதர்கள் சினிமாவில் அரிது. அதிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் இப்படியாக இருப்பது மிக அரிது.
சினிமாவை நேசிக்கும் அடுத்த தலைமுறை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் மனம் கொண்டவர்.
சசிகுமார் போன்ற உண்மையான மனிதர்கள் தான் சினிமாவை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.
அவர் எனக்காக நடிக்க முன்வந்துள்ளதை, என் உழைப்பிற்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
இந்தப் படம் ஒரு கதை மட்டும் அல்ல… அது சசி அண்ணனின் நம்பிக்கையையும், என் உழைப்பின் மதிப்பையும் சுமந்திருக்கிறது.
படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. படத்தைத் தயாரித்து வரும் ஜே. கமலகண்ணன் அவர்களுக்கும், என் படக்குழுவினர்கள், நடிகர்கள், குறிப்பாக என் உதவி இயக்குநர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

விரைவில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன். பெரும் உழைப்புடன் எடுக்கப்படும் இந்தப் படம், உங்களால் கொண்டாடப்படும் என நம்புகிறேன், நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.