
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாஞ்சாலியூர் யாசின் நகரைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது 48). கடந்த 2018-ம் ஆண்டு, தன் கணவர் இறந்துவிட்ட நிலையில், அவர் செய்து வந்த வட்டிக்குவிடும் தொழிலை எல்லம்மாள் செய்யத் தொடங்கினார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பெரியசாமி (16), பத்தாம் வகுப்புப் பயில்கிறார். மகள் சுசிதா, ஏழாம் வகுப்புப் பயின்று வந்தார்.
கடந்த 26-ம் தேதி காலை, வழக்கம்போல் மகன் பெரியசாமியும், மகள் சுசிதாவும் பள்ளிக்குச் சென்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையில், அன்று மதியமே சுசிதா வீடு திரும்பினார். தாய், மகள் இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். அன்று மாலை, எல்லம்மாளின் தம்பி மனைவி சரோஜா என்பவர், எல்லம்மாளை பார்ப்பதற்காக வந்தார்.
அப்போது, ஷோபாவில் எல்லம்மாள் ரத்தவெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தரையில் அவரின் மகள் சுசிதாவும் கழுத்து அறுக்கப்பட்டு வீசப்பட்டிருந்தார். இருவரின் சடலங்களையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளான சரோஜா கத்திக் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.பி தங்கதுரையும் நேரில் வந்து விசாரணை நடத்தியதையடுத்து, கொலையாளிகளை விரைந்து பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு மற்றும் செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள் மூலம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டன.
விசாரணையில், காவேரிப்பட்டணம் மோட்டூர் குரும்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார் (23), சத்யராசு (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கு தாய், மகள் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று அவர்களைக் கைது செய்திருக்கின்றனர்.
இது குறித்து, போலீஸார் கூறுகையில், “எல்லம்மாளிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் டாக்குமென்ட்டை கொடுத்து சத்யராசு வட்டிக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளான். அந்தப் பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது வாங்கிக் குடித்து வீணடித்து செலவழித்துள்ளான் சத்யராசு. `வாரந்தோறும் ஆயிரம் ரூபாய்’ என பத்து வாரத்துக்குள் கடனை திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், சத்யராசு மூன்றாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டான். இதனால், ஆத்திரமடைந்த எல்லம்மாள் சத்யராசுக்கு போன் செய்து, `பணத்தைக் கொடு. இல்லைனா, உன் பைக்கை கொண்டுவந்து விடு’ என சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு `பைக்கை விட முடியாது’ என சத்யராசு சொன்னதால், ஆத்திரமடைந்த எல்லம்மாள் `ஏழாயிரம் கொடுக்கவே உனக்குத் துப்பில்ல. நீயெல்லாம் மனுஷன்னு எதுக்கு வாழுற. எங்கேயாவது போய் சாக வேண்டியது தானே..’ என ஏளனமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால், சத்யராசு கடும் கோபமடைந்து, 25-ம் தேதி நள்ளிரவே அரிவாளுடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு எல்லம்மாள் வீட்டுக்குச் சென்றுள்ளான். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கொலை செய்யும் திட்டத்தை மறுநாள் தள்ளி வைத்துள்ளான்.

மறுநாள் தூங்கி எழுந்து ஆளுக்கொரு பீர் குடித்துவிட்டு, மீண்டும் எல்லம்மாள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஆள் நடமாட்டம் இருந்ததால் காத்திருந்து நோட்டமிட்டு, மாலை 4 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து எல்லம்மாளையும், அவரின் மகளையும் வாயை பொத்தி கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கின்றனர். பிறகு, எல்லம்மாளிடம் இருந்த 2 செயின், 2 வளையல்கள், 1 மோதிரம், வீட்டில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு, தங்கள் மீது படிந்திருந்த ரத்தக்கறையையும் கழுவிக்கொண்டு வீட்டின் பின்வழியாக தப்பிச் சென்றது, விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனம், நகைகளையும் மீட்டிருக்கிறோம். கைதான 3 பேரையும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருப்பதாகவும்’’ போலீஸார் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, தந்தை இறந்த நிலையில், இப்போது தாய், தங்கையும் படுகொலை செய்யப்பட்டிருப்பதால், ஆதரவின்றி தனிமையில் நிற்கும் சிறுவன் பெரியசாமியின் நிலை எல்லோரையும் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.