
செங்கோட்டையன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, பேசிய செங்கோட்டையன், “அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.
அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
டெல்லி பயணம்
இதையடுத்து, அடுத்த நாளே ஹரித்துவார் செல்வதாகக் கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லியில் வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து அதிமுக-வில் நிலவும் பிரச்னை குறித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாள்களாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் செங்கோட்டையனைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

கெடு விதிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்,
“என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினர்.
40 பேர் நீக்கம்
ஏற்கெனவே, இரண்டாம் கட்டமாக 20-க்கும் மேற்பட்டோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்டமாக செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், குறிப்பாக செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாகக் கருதப்படும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டப் பொருளாளர் கந்தவேல்முருகன்,
இணைச் செயலாளர் அனுராதா,
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செல்வம்,
இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம்,
மாவட்டப் புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் மௌதீஸ்வரன்,
மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பெரியசாமி,
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கௌசல்யாதேவி,
துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி,
மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் ராயண்ணன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் முத்துசாமி
என 40 பேர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதற்குப் பதிலடியாக அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி வருவது ஈரோடு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.