
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட விற்பட்டு கிராமத்தின் த.வெ.க செயலாளராக இருந்த ஐயப்பன், இன்று மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கிய ஐயப்பனை மீட்ட உறவினர்கள், அவரை மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஐயப்பன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கினர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஐயப்பன் எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், `இதற்கு முக்கிய காரணம் வி.செந்தில் பாலாஜி – வி.ஐயப்பன்’.
`கரூர் மாவட்டத்தில் விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது.
போலீஸும் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் உயிர் ஐயப்பன். தமிழக வெற்றிக் கழக செயலாளர், த.வெ.க கிளை செயலாளர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்து செஞ்சி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.