
போன உசுரு திரும்ப வருமா…
`உன்ன தூக்கிக் கொடுத்துட்டு நாங்க மட்டும் என்ன செய்ய போறோம்…’ கரூர் நகர்ப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஏமூர் எனும் கிராமம். ஊருக்குள் நுழையும்போதே அழு குரல்கள் கேட்கத் தொடங்குகின்றன. கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்தான் நம்மை அந்த கிராமத்துக்குக் வரவேற்கவும் செய்கின்றன. இந்த கிராமத்திலிருந்து மட்டும் 15 பேர் ஒரு டெம்போ வேனில் விஜய்யின் கூட்டத்தைக் காணச் சென்றிருக்கின்றனர்.
அதில் 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். 35 வயது பெண்ணும் அவரின் 14 வயது மகளும் கூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள். 60 வயதான பாட்டி ஒருவர் கூட்டத்தில் தவறிவிழுந்து மிதிபட்டு உயிரை விட்டிருக்கிறார். 10 வயது மகனுடன் விஜய்யை பார்க்கச் சென்று மகனை கூட்டத்திற்கு பறிகொடுத்து பித்து பிடித்த நிலையில் வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கிறார் இன்னொரு பெண்.
‘சோறு தண்ணி கூட இறங்காம கெடக்கோம்ப்பா… எல்லாமே ஒன்னு மண்ணா சுத்திக்கிட்டு இருந்த ஆளுங்க இன்னைக்கு இல்ல. யார் யாரோ வராங்க. ஆறுதல் சொல்றாங்க. பணம் கொடுக்குறாங்க. ஆனா, போன உசுரு திரும்ப வருமா. அத்தனை குடும்பமும் நிலைக்குலைஞ்சுல இருக்கு.’ என இன்னமும் அந்த கோர சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் கூடி உட்காந்து தங்களுக்குள்ளேயே பேசி ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் ஏமூர் பெண்கள்.
‘என் பொண்டாட்டியை இப்படி விட்டுட்டேனேய்யா..’
60 வயதான பாட்டி அருக்காணி அந்த வேலுசாமிபுர கூட்டத்தில் தவறி விழுந்து மிதிபட்டு இறந்திருக்கிறார். ஏமூர் கிராமத்தில் நுழைந்தவுடன் முதல் தெருவிலேயே இருக்கிறது அருக்காணியின் வீடு.
பக்கத்து வீட்டுப் பெண் விஜய்யைப் பார்த்துவிட்டு வரலாம் என அழைத்ததால் அருக்காணியும் டெம்போவில் வேலுசாமிபுரத்துக்கு வந்திருக்கிறார்.
‘என் பொண்டாட்டியை இப்படி விட்டுட்டேனைய்யா.. இந்தப் பக்கம் இருந்து அவ வர்ற மாதிரி இருக்கு. அந்தப் பக்கம் பார்த்தா அவ வர்ற மாதிரி இருக்கு. எந்த பக்கம் பார்த்தாலும் அவளே நிக்குற மாதிரி இருக்கு.’ என கண்கள் முட்ட வேதனையில் பேசினார் அருக்காணியின் கணவர் காளியப்பன்.
துக்கம் விசாரிக்க வரும் எல்லாரிடமும் தனது செல்போன் கவருக்குள் வைத்திருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து குமுறி அழுகிறார். ‘அழகிங்க அவ… 60 வயசாகுது. ஆனா, இன்னும் அவ்வளவு ஆரோக்கியமா துடிப்பாதான் இருந்தா. எங்க கிராமத்துக்கு பக்கத்து கிராமம் அவ. அவளை பார்க்குறதுக்காகவே சைக்கிளை எடுத்துட்டு சுத்தி சுத்தி வந்தேன்.
1978 லயே ரெண்டு பேரும் விரும்பி குடும்ப சம்மதத்தோடு கட்டிக்கிட்டோம். மூணு பசங்க ஒரு பொம்பள புள்ள. நாலு பிள்ளைங்களையும் வளர்த்து ஆளாக்கி கட்டி வச்சிருக்கோம். அவ கட்டும் சட்டுமா இல்லாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா.
எந்த வேத்துமையும் பார்க்காம குடும்பத்துல இருக்க அத்தனை பேர் மேலையும் அம்புட்டு பாசமா இருப்பா. லட்சக்கணக்குல பணம் கொடுக்குறாங்க. எதுவும் அவளுக்கு ஈடாகுமா? எனக் கூறி நம்மிடமும் செல்போன் கவருக்குள் சொருகி வைத்திருந்த அருக்காணி அம்மாளின் புகைப்படத்தை எடுத்து காண்பித்தார்.
‘எங்க வீட்ல ஆறு பொம்பள புள்ளைங்க. அஞ்சாவதும் பொம்பள புள்ளயா பிறந்தப்போ. இனியும் பொம்பள புள்ள பிறக்கக்கூடாதுன்னு ஆறாவதா பிறந்த புள்ளைக்கு போதும் பொண்ணுன்னு எங்கப்பா பேரு வச்சுட்டாரு. ஆனா, அடுத்தும் ஒரு பொம்பள புள்ள பொறந்துச்சு. ஆறு பிள்ளைகளும் ஒன்னு மண்ணாதான் வளர்ந்தோம்.

அருக்காணி மூணாவதா பொறந்தவ. அவளைப் பார்த்துக்கணும்னு சொல்லி எங்கப்பா என்னையை படிப்பை நிறுத்திட்டாரு. நான்தான் அருக்காணியை தூக்கி வளர்த்தேன். எல்லாருக்கிட்டயும் அவ்வளவு பாசமா இருப்பா. நோய் நொடி எதுவும் இல்லாம நல்லா இருந்தா.
அவளோட வீட்டுக்காரரு தங்கம். கட்டுனா இவளைதான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நின்னு கட்டுனாரு. பொண்டாட்டியை அவ்வளவு நல்லா பார்த்துப்பாரு. இன்னைக்கு அவருக்குதான் என்ன ஆறுதல் சொல்லன்னு தெரியாம திக்கத்து நிக்குறோம்.’ என்கிறார். அருக்காணியின் அக்கா. காளியப்பனின் கையை இறுகப்பற்றி ஆறுதல் கூறிவிட்டு அடுத்த வீட்டை நோக்கிச் சென்றோம்.
‘மவராசியா வாழ்ந்துருக்கணும். இப்படி போயிட்டாளே..’
சந்திராவுக்கு வயது 38. நூறு நாள் வேலைக்குச் செல்கிறார். கணவர் செல்வராஜ் விவசாயக்கூலி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் பள்ளியிலிருந்து இடைநின்றவர்கள். 20 வயதாகும் மூத்த மகன் ட்ரைவராக வேலை செய்கிறார். இளைய பையன் இப்போதுதான் பள்ளியிலிருந்து இடை நின்றிருக்கிறார்.
தகர ஷீட்டால் கட்டப்பட்ட கூரை வீட்டில்தான் இத்தனை ஆண்டுகளாக வசித்திருக்கிறார்கள். குருவி சேர்ப்பதைப் போல சிறுக சிறுக சேமித்து வைத்து அரசின் மானியத்தோடு இப்போது ஒரு புது கான்க்ரீட் வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரத்தில் வேலைகளை முடித்து, சீக்கிரமே பால் காய்ச்ச திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்குள் இப்படி ஒரு சம்பவம். இப்போது சந்திரா அவர்களோடு இல்லை. இளைய மகனோடு விஜய்யை பார்க்க சென்றிருக்கிறார். கூட்டத்தில் மகனும் அம்மாவும் தனித்தனியாக பிரிந்து திக்குமுக்காடியிருக்கிறார்கள்.
சந்திரா கூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். செல்வராஜூக்கு சந்திரா இறந்த செய்தி தெரியாது. இதே கிராமத்தை சேர்ந்த பிரித்திக் என்ற 10 வயது பையனும் நெரிசலில் சிக்கி இறந்திருக்கிறான்.
ஊர்க்காரப் பையன் என்பதால் பதறியடித்துக் கொண்டு செல்வராஜூம் கரூர் அரசு மருத்துவமனையை நோக்கி ஓடியிருக்கிறார். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்களை காவலர்கள் மொபைலில் படம் எடுத்து வந்து வெளியே காத்திருந்த உறவினர்களிடம் காட்டி அடையாளம் சொல்ல சொல்லியிருக்கிறார்கள் .
அப்படி சந்திராவின் புகைப்படத்தையும் எடுத்து வந்து காட்டிய போது செல்வராஜ் உடைந்துவிட்டார். ‘அவளே போயிட்டாளே…இனிமே நாங்க மட்டும் இருந்து என்ன பண்ணப்போறோம். எந்தக் கூட்டத்துக்கும் போகமாட்டா. இந்தக் கூட்டத்துக்கு பையன் கூப்டானேன்னு ஏதோ ஒரு ஆர்வத்துல ஊர்க்காரங்களோட சேர்ந்து போயிருக்கா இப்டி ஆயிப்போச்சு.
புள்ளைங்கன்னா உசுரு அவளுக்கு. சின்னவனுக்கு தோசைதான் பிடிக்கும். அதுவும் சூடா ஊத்திக் கொடுத்தாதான் சாப்டுவான். அவனுக்குன்னே மாவு அரைச்சு வச்சு கேட்குறப்போலாம் சூடா ஊத்திக் கொடுப்பா.

இன்னைக்கு அந்த பய சாப்பிடாம கெடக்கான். ஒரு வாய் ஊட்டி விட அவன் அம்மா இல்லயே. நான் இருந்து என்ன பண்ணப்போறேன். இனிமே…’ என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார் செல்வராஜ்.
சந்திராவின் வீட்டில் இரண்டு பெண்கள் கண்ணீர் வழிய அத்தனை சோகமாக அமர்ந்திருந்தார்கள். சந்திராவின் சகோதரிகளாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டு அவர்களிடம் பேசினேன்.
அப்போதுதான் தெரிந்தது அவர்கள் சந்திராவின் சகோதரிகள் அல்ல. சந்திரா புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் கையாள் வேலைக்கு வந்த பெண்கள். ‘ஒன்றரை மாசமா அக்கா வீட்லதான் வேலை பாக்கோம். அவ்வளவு மரியாதையா பாசமா எங்களை நடத்துவாங்க. வேலைக்கு போயி சிறுக சிறுக சேர்த்து வச்சு வீடு கட்டுறாங்க.
அதனால அவங்க வீட்டுக்கே பல நாட்கள் எங்க கூட சேர்ந்து அவங்களும் கல்லு மண்ணெல்லாம் சுமந்து வேலை செஞ்சிருக்காங்க. அன்னைக்கு மீட்டிங் போனப்போ கூட, எங்களுக்கு சாயங்காலமா டீயும் வடையும் வாங்கிக் கொடுக்க சொல்லி ஒரு பையன் கிட்ட காசு கொடுத்துட்டுதான் போச்சு. பசங்க படிக்கவும் இல்லை. பசங்களுக்குன்னு ஏதாச்சு இருக்கணும். அதுக்காகதான் இந்த வீடுன்னு சொல்லிட்டே இருப்பாங்க. மவராசியா வாழ்ந்துருக்கணும். இப்படி போயிட்டாளே..’ என்றனர் அந்த பெண்கள்.
‘சிங்கிள் மதரா அக்காதான் ப்ரித்திக்கை வளர்த்தா…’
ஒரு துக்க வீட்டில் அந்த துக்கத்துக்கு வந்திருப்பவர்களிடமே வழி கேட்டு அடுத்த துக்க வீட்டிற்கு செல்லும் கொடுமை யாருக்கும் வாய்க்கக்கூடாது. சந்திராவின் வீட்டிலிருந்து 10 வயது சிறுவனான ப்ரித்திக்கின் வீட்டிற்குச் சென்றேன். ஒரு அறைக்குள் இரண்டு பெண்களோடு பித்து பிடித்ததைப் போல அமர்ந்திருந்தார் ப்ரித்திக்கின் அம்மா.
அவர் பேசும் மன நிலையில் இல்லை. ப்ரித்திக்கின் தாய் மாமாவிடம் பேசினேன். ‘ஊர்ல எல்லாரும் போறாங்கன்னு பையன கூட்டிட்டு போயிருக்கு அக்கா. கூட்டத்துல பையன் கைய இறுக்கமாத்தான் பிடிச்சிட்டு இருந்திருக்கு. ஆனா, ஒரு கட்டத்துல கூட்ட நெரிசல் அதிகமாகி பையன் கைய விட்டு தவறி கீழ விழுந்துருக்கான்.

அக்காவும் மயக்கமாகிருச்சு. எங்களுக்கு தகவல் வந்துச்சு. ஆஸ்பத்திரிக்கு ஓடி போனோம். எல்லாம் முடிஞ்சிருச்சு. எங்க பையன அடையாளம் காமிச்சு உடம்ப வாங்கிட்டு வந்தோம். எங்க அக்காவும் ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட்ல இருந்துதான் வந்துருக்கா. ப்ரித்திக் பிறந்த உடனேயே அவங்க அப்பா விட்டுட்டு போயிட்டாரு.
சிங்கிள் மதரா அக்காதான் அவன வளர்த்தா. ப்ரித்திக் நல்ல படிப்பான். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவான். அவன வளர்த்து ஆளாக்கணுங்றதுதான் அக்காவோட கனவு. இன்னைக்கு அவனே இல்லாம போயிட்டான்.’ என உணர்ச்சிகள் மறத்து போன நிலையில் விரக்தியோடு அமர்ந்திருந்த அக்காவைப் பார்த்து வேதனையோடு கூறினார்.
சக்திவேலின் வீட்டில் இரண்டு இழப்பு…
ஊர்க்காரர் ஒருவரை பிடித்து அவரின் டூவிலரிலேயே இன்னும் 2 கி.மீ தள்ளியிருக்கும் சக்திவேலின் வீட்டிற்குச் சென்றோம். ‘என் தாயி எங்களை விட்டுட்டு போயிட்டியே…’ என ஒப்பாரி சத்தம் கேட்க வீட்டிற்குள் நுழையவே மனதுக்குள் ஏதோ அழுத்தத் தொடங்கியது.
தனிப்பட்ட முறையில் இப்படி ஒரேயடியாக ஏற்பட்ட துக்கங்களையும் தொடர் அழுகைகளையும் பரிதவிப்புகளையும் இதற்கு முன் கண்டதே இல்லை. அதனாலயே மனதுக்குள் அவ்வளவு கனம். கொஞ்சம் இறுக்கத்தோடுதான் சக்திவேலின் வீட்டிற்குள் சென்றேன்.
வெறுமையாக இருந்த அந்த வீட்டிலும் எல்லா வீடுகளையும் போல ஒரு காமாட்சி விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. சக்திவேலின் வீட்டில் இரண்டு இழப்பு. விஜய்யின் கூட்டத்தை பார்க்க சென்ற சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினி, 14 வயது மகள் தரணிகா என இருவருமே கூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள்.

‘என்னத்தய்யா சொல்ல…இவனுக எதோ சதி பண்ணிட்டானுக. அதுக்கு மேல என்னத்தய்யா சொல்ல. என் மவளுக்கு ரெண்டு மவ. ஒரு பேத்திக்கு மன வளர்ச்சி இல்ல. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி அந்த புள்ளயும் இறந்து போச்சு.
என் பொண்ணோட இன்னொரு பேத்தியையும் தூக்கிக் கொடுத்துட்டு உட்காந்திருக்கேன். என் மருமவனுக்குதான்யா என்ன சொல்லி தேத்துறதுன்னு தெரியல. பொண்டாட்டி புள்ளன்னு எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு தனிமரமா நிக்காறே அந்த மனுசன்…‘ என கைகளைப் பற்றிக் கொண்டு அழுதார் பிரியதர்ஷினியின் அம்மா. மனைவிக்கும் மகளுக்கும் செய்ய வேண்டிய இறுதி காரியங்களைச் செய்வதற்காக ஆற்றுக்கு சென்றிருந்த சக்திவேல் கொஞ்ச நேரம் கழித்து வந்தார்.
‘விஜய்யை பார்க்க போனப்போ வேணாம்னு சொன்னேன். பொண்ணுக்கு விஜய்னா பிடிக்கும். அதனால போயே ஆகணும்னு சொன்னாங்க. அப்ப பார்த்து பத்திரமா போங்கன்னு நான்தான் ரெண்டு பேரையும் டெம்போல ஏத்தி விட்டேன்.

மதியம் சாப்பாட ஒரு டப்பால கெட்டிட்டு கிளம்பி போனாங்க. விஜய்யை பார்க்க அதிக கூட்டம் கூடியிருக்குன்னு தெரிஞ்சு ஒரு 5 மணிக்கு அவளுக்கு போன் போட்டேன். அவ எடுக்கல. பதிலுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் போட்டா. ‘லேட் ஆகும்னு நினைக்குறோம். விஜய்யை பார்த்துட்டுதான் வருவோம். நீ சாப்பிட்டுட்டு இருங்க மாமா…’ ன்னு சொல்லியிருந்தா, அந்த குரல் இன்னும் அப்படியே காதுல நிக்குது. ‘வேணாம்மா கூட்டம் அதிகமா இருக்கு. பத்திரமா வந்துருங்க.’ன்னு நான் போட்ட மெசேஜ் அவளுக்கு போய் சேரவே இல்ல. மனசு முட்டி போய் நிக்கேன் சார். இனிமே வாழ்ந்து என்னத்துக்கு? பொண்டாட்டி போயிட்டா. என் புள்ளைய நல்லா படிக்க வச்சு கலெக்டர் மாதிரி ஒரு அதிகாரியா ஆக்கணும்னு கனவு கண்டேன். வாழ்க்கையே போயிருச்சே சார் இப்போ…’ கண்ணீர் வற்றிய நிலையில் விரக்தியாக பேசி முடித்தார் சக்திவேல்.
ஒரே வீட்டில் 3 பேர்
தாந்தோன்றிமலையில் ஒரே வீட்டில் 3 பேர் இறந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றோம். ஒரு வீட்டையே பறிகொடுத்த விரக்தியில் இருந்ததால் அங்கு யாரும் பேசும் மனநிலையில் இல்லை.
அதேமாதிரி, கரூர் சிட்டிக்குள்ளேயே கிருத்திக் என்ற 7 வயது பையன் இறந்ததாக தகவல் கிடைத்து அந்த வீட்டுக்கும் சென்றோம். ‘அந்த குட்டிப் பையனுக்கு விஜய்யை ரொம்பப் பிடிக்கும். அதனால தங்கச்சி கூட்டிட்டு போச்சு.

ஆனா, கூட்ட நெரிசல்ல ரெண்டு பேருமே மயக்கமாகிட்டாங்க. கிருத்திக் ஸ்பாட்லயே இறந்துட்டான். தங்கச்சி ஐ.சி.யூவுல இருந்தா. ரொம்ப நேரம் கழிச்சுதான் அவ கொஞ்சம் சரியாகினா. பையன் இறந்த துக்கத்த கூட உணர முடியாத நிலைமைலதான் அவ இருந்தா. என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு ஒன்னுமே புரியல. மொத்த குடும்பமும் இடிஞ்சு போயி கெடக்குது.’ என்கிறார் கிருத்திக்கின் உறவினர் ஒருவர்.

எல்லா வீட்டிலும் வெறுமைக்கு மத்தியில் ஒரு அகல் விளக்கோ காமாட்சி விளக்கோ எரிந்துகொண்டிருந்தது. ஆனால், எந்த வீட்டிலும் ஒளி இல்லை. மனம் அவ்வளவு கனமாக இருக்கிறது. அந்த அழுகைகளும் பரிதவிப்புகளும் பல நாள் உறக்கத்தைக் கேட்கப்போகின்றன.