• September 29, 2025
  • NewsEditor
  • 0

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரதாப். ஊடகவியலாளரான இவர் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

இந்த நிலையில், ஜோஷியாரா தடுப்பணையில் ஊடகவியலாளரின் கார் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்கோரி அருகே உள்ள பாகீரதி ஆற்றில் ஊடகவியலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஊடகவியலாளரின் மனைவி முஸ்கன்

இதற்கிடையில் ஊடகவியலாளரின் மனைவி முஸ்கன், ஊடகங்களிடம் பேசினார். அப்போது, “என் கணவர் காணாமல் போன அன்று இரவு 11 மணியளவில் அவருடன் பேசினேன். அதன் பிறகுதான் அவர் காணாமல் போயிருக்கிறார்.

சமீபத்தில் உத்தரகாசி மாவட்ட மருத்துவமனை மற்றும் பள்ளி பற்றிய தனது புலனாய்வு குறித்து தன் யூடியூப் சேனலான டெல்லி உத்தரகாண்ட் லைவ்வில் பதிவேற்றியிருந்தார்.

அதற்குப் பிறகு மிகவும் கவலையாக இருப்பதாக என்னிடம் கூறினார். வீடியோக்களை நீக்காவிட்டால் பலர் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகக் கூறினார்.

அதற்குப் பிறகு இரவு 11.50-க்கு, அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை அனுப்பினேன். அது டெலிவரி ஆகவே இல்லை. அவர் தவறுதலாக அணையில் விழவில்லை. அது விபத்தல்ல” எனக் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வழக்குபதிவு செய்து விசாரித்துவரும் காவல்துறை, “பிரேத பரிசோதனைக்குப் பிறகே இது கொலையா? விபத்தா என்பது தெரியவரும். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *