• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 27), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயண பிரசாரத்தில், எதிர்பாராதவிதமாக 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கரூர் துயரம்

ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை சென்றுகொண்டிருக்க, மறுபக்கம் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் சாடி வருகின்றனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் அழுததை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விமர்சனம் செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்புமணி, “உண்மை நிலவரம் வெளியே வர வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். அங்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை. தற்போது கரூருக்கு முதலமைச்சர் தனி விமானத்தில் வருகிறார்.

இதில் இன்னொரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டுமென ஆஸ்கர் நிறுவனத்தை நான் கேட்டு கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில், அன்புமணியின் இத்தகைய பேச்சை அன்பில் மகேஸ் விமர்சித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்பில் மகேஸ், “மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரீகமற்று கொச்சையாகப் பேசியிருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள்.

அவர்களை என்னுள் ஒருவராகக் கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராகக் கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.

எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல `எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்’.

தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.

வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *