
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “கரூரில் த.வெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட நிகழ்வில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இச்சம்பவத்திற்கு காவல்துறை மீது பழி சுமத்துவது முற்றிலும் தவறானது. இதுகுறித்து பொறுப்பு டி.ஜி.பி தெளிவாக விளக்கம் அளித்துவிட்டார்.
இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் முதலில் கேட்ட 2 இடங்களும் மிகவும் குறுகலானவை என்பதால், காவல்துறை அனுமதி மறுத்து, தற்போது விபத்து நடந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. எனவே காவல்துறை தனது கடமையை சரியாகவே செய்துள்ளது. அவர்கள் மீது குற்றம் கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது. நிகழ்வுக்கான நேரம் காலை 8.45 மணி மற்றும் மதியம் 12 மணி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், த.வெ.கவின் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு முதல் நிகழ்விற்கு மதியம் 2 மணிக்கும், இரண்டாவது நிகழ்விற்கு இரவு 7.30 மணிக்கும் வந்திருக்கிறார்.
பொதுவாக, அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் கூட்டம் அதிகம் சேர வேண்டும் என சற்று தாமதமாக வருவது வழக்கம். ஆனால், காலை நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் மாலை வரை காத்திருந்தனர். ஆட்களைத் திரட்டுவதற்காக அக்கட்சியினர் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் கூட்டம் சேரும் வரை காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பசி, சோர்வு மற்றும் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விஜய் வந்ததும் ஏற்பட்ட ஆர்வ மிகுதியே இந்தத் துயரத்திற்கு காரணமாக இருக்கலாம். நிகழ்வின் காலதாமதமே உயிர் பலிக்கு முக்கிய காரணம். இது இயற்கையாக நடந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பது விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் மூலமாகத்தான் தெரிய வரும். அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் இப்படி ஒரு பெரும் சோகம் நடந்தது அனைவருக்கும் வேதனையளிக்கிறது” என்றார்.