• September 29, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். அவருக்கு ‘பார்க்கிங்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. டெல்லியில் விருதினைப் பெற்றவர், சென்னை திரும்பியவுடன் ‘நடிகர் திலகம்’ வீட்டிற்கு சென்று விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கியதுடன், விஜயகாந்த் நினைவிடத்திற்கும் சென்று வணங்கினார். இது குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டால், நெகிழ்கிறார் மனிதர்.

மறுநாளே சிவாஜி அப்பா வீட்டுக்குப் போயிட்டேன்!

”தேசிய விருதை எனக்கு அறிவிச்சதும், ‘இந்த விருதை யாருக்கு அர்ப்பணிக்குறீங்க?’னு கேட்டாங்க. சிவாஜி அப்பாவுக்குதான் டெடிகேட் பண்ணுவேன்னு சொன்னேன். அதனால விருது வாங்கின மறுநாளே சிவாஜி அப்பா வீட்டுக்குப் போயிட்டேன். என்னோட மானசீக தந்தைகிட்ட விருதை காண்பிச்சிட்டு, விழுந்து வணங்கி ஆசி வாங்கிட்டு வந்தேன்.

பார்க்கிங்கில்..

என்னோட ஆரம்பகாலங்கள்ல இருந்து விஜயகாந்த் அண்ணா பழக்கம். அவரோட ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் இருந்து அவர் மனசுல இடம்பிடிச்சிட்டேன். ‘பாஸ்கர்… பாஸ்கர்’னு என் மேல ரொம்ப பிரியமா இருப்பார். அவரோட எத்தனையோ படங்கள்ல நடிச்சிருக்கேன். எத்தனையோ முறை என்னை உட்கார வச்சு எனக்கு சாப்பாடு போட்டிருக்கார். அதனால் தான் எல்லோர்கிட்டேயும் நான் சொல்றது விஜயகாந்த் எனக்கு அண்ணன் மட்டுமல்ல, அம்மா என்பேன்.

‘நீ இங்கே வராதே’னு சொல்லுவார் விஜயகாந்த் அண்ணன்!

அவர் வீட்டுக்கு எப்போ போனாலும் அண்ணனும் அண்ணியும் (பிரேமலதா விஜயகாந்த்) சேர்ந்து எனக்கு விபூதி பூசி ஆசிர்வதிப்பாங்க. சாப்பிட வைச்சு அனுப்புவார். அவர் இருந்த காலங்கள்ல அவரோட கட்சி ஆபீஸுக்கு போகும் போது அவர் சொன்ன வார்த்தை ‘நீ இங்கே வராதே! உன்னை ஏற்கனவே விஜயகாந்த் ஆளுனு பேசிக்கிட்டிருக்காங்க. நீ எல்லாரோடவும் நடிக்கணும்’னு சொன்னார்.

என் வளர்ச்சியில் மிக அக்கறை கொண்டவர் கேப்டன் அண்ணா. அவர் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார். இந்த தருணத்தை சிறப்பாக கொண்டாடி இருப்பார். அவர் இல்லை. அவரோட ஆன்மா இருக்கிறது. அதனால் அவர்கிட்ட கொண்டுபோய் வைத்து, ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன்.

எம்.எஸ்.பாஸ்கர்

அடுத்து கமல்ஹாசன் அண்ணாவையும், எடிட்டர் மோகன் அப்பாவையும் பார்க்கப் போறேன். இதுல எடிட்டர் மோகன் அப்பா, ‘பாஸ்கர் தான் என் மூத்த பிள்ளை’னு பாசமாக சொல்லுபவர். அவர் டப்பிங் செய்த அத்தனை படங்கள்லேயும் என்னை பேச வச்சு அழகுபார்த்திருக்கார். அவரோட மகன்கள் ராஜா, ரவி மேல அவருக்கு எவ்வளவு அக்கறையோ அவ்வளவு அக்கறை என்மீதும் அவருக்கு உண்டு! அதனால் அவரை சந்தித்தும் விருதை காண்பிப்பேன்!”. என்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *