• September 29, 2025
  • NewsEditor
  • 0

“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டதால் 41 பேர் உயிரிழந்தனர்” என்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி

கரூரில் நடந்த துயரமான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தின்போது போக்குவரத்தை காவல்துறை சீர் செய்யவில்லை, போதுமான காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை, இதனை பயன்படுத்திக்கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களால் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளது,

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

கரூர் சம்பவத்தை மாநில காவல்துறை விசாரிக்கக் கூடாது, 41 பேர் உயிரிழந்ததை சிபிஐ விசாரிக்க வேண்டும், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும், சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இவ்வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம், இதுவரை நடைபெற்ற விஜய்யின் பிரசாரத்தில் காவல்துறை எங்கும் லத்தி சார்ஜ் செய்ததில்லை, இந்தக் கூட்டத்தில் காவல்துறை நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியால் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தயாராக உள்ளார், ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை கேட்கும், ஆனால் புலன் விசாரணையில்தான் யார் சதி செயலில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க முடியும்.

கரூர்: விஜய்
கரூர்: விஜய்

வலிமையான அமைப்பாக உள்ள சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது, சதி வலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களின் மரணத்திலும் அரசியல் செய்யப்படுகிறது, அப்படி அரசியல் செய்பவர்கள் மனிதர்கள் கிடையாது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்வதற்கு காவல்துறை ஒரு நாளுக்கு முன்புதான் அனுமதி கொடுத்தது, துயர சம்பவத்திற்கு பிறகு காவல்துறை கொடுக்கும் விளக்கம் அவர்களுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது,

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமைகளில் இருந்து அரசு விலகிச் சென்றுள்ளது, காவல்துறை அளித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் உடற்கூறாய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் இவ்விவகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வருகிறது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *