
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது.
இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.
3ம் இடத்தை பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் ‘India Today’-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் ரேஸிங்கின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து பேசியிருக்கிறார். “போட்டியை முடிக்கும் வரை அல்லது ஒரு மோசமான விபத்தை சந்திக்கும் வரை நாம் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை உணரமுடியாது.
எப்படியாவது இலக்கை அடைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து துபாய் 24H ரேஸிற்கு முன்பு அவர் சந்தித்த விபத்து குறித்தும் பேசியிருக்கிறார். ” அந்த விபத்தை நான் சந்தித்த பிறகு பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், எந்தவொரு அணி மற்றும் ரேஸரிடம் கேட்டாலும் விபத்துகள் மோட்டார் ஸ்போர்ட்டின் ஒரு அங்கம் என்று ஒப்புக்கொள்வார்கள்.
ஒரு காரை வடிவமைக்கும்போது ரேஸரின் பாதுகாப்புக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிது.

இருப்பினும், நீங்கள் காரின் வரம்புகளையும் உங்களின் வரம்புகளையும் தாண்டிச் செல்ல முயற்சிக்கும்போது, விபத்துகளும் மோதல்களும் நடப்பது இயல்புதான்.
சினிமா படப்பிடிப்புகளின்போது எனக்கு விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் அறுவை சிகிச்சைகளும் செய்துகொண்டிருக்கிறேன்.
அந்த விபத்துகளும், காயங்களும் சினிமாவில் இருந்து என்னைத் தடுக்கவில்லை. ‘உங்களுக்கு காயம் ஏற்படுகிறது. அதனால் படங்களில் நடிக்காதீர்கள்’ என்று ரசிகர்களும் என்னிடம் சொல்லவில்லை. அப்போது ஏன் இந்த விபத்துகளும் காயங்களும் மோட்டார் ஸ்போர்ட்டைத் தடுக்கணும்? என்று கேட்டிருக்கிறார்.