
சென்னை: “கரூரில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.” என தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பலி 41 ஆனது…கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29-ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.