• September 29, 2025
  • NewsEditor
  • 0

கருடசேவை உற்சவம்

ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல. அதில் அவரின் சாந்நித்தியம் நிறைந்திருக்கிறது என்பதை இறைவன் அவ்வப்போது அற்புதங்கள் மூலம் உணர்த்துவது வழக்கம்.

சில தலங்களில் மூர்த்தி விசேஷம் மிகுந்து பிரசித்தம் பெறுவதும் உண்டு. திருச்செந்தூர், சிக்கல் போன்ற பல தலங்களில் சுவாமிக்கு வியர்க்கும்.

திருப்புறம்பியத்தில் குடம்குடமாக அபிஷேகிக்கப்படும் தேன் அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொள்வார் பிரளயம் காத்த விநாயகர்.

அந்த வரிசையில் இன்றும் நடக்கும் அற்புதமாக விளங்குகிறது நாச்சியார்கோவில் கல்கருடன் கருடசேவை உற்சவம்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள அற்புத திருத்தலம் திருநறையூர். பெருமாளுக்கு அருகிலேயே இங்கு கோயில் கொண்டு அருள்கிறார் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடன். மிகவும் பிரமாண்ட வடிவினராக விளங்கும் இந்த மூர்த்தியே உற்சவராகவும் திகழ்கிறார்.

பொதுவாக உற்சவர் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டிருப்பார். ஆனால் இங்கே மூலவரான கல்லினால் ஆன கருடரே உற்சவராகவும் விளங்குவது சிறப்பு.

நாச்சியார்கோவில் கருட சேவை

கல்கருடன் சந்நிதியில் இருந்து தூக்கும்போது 4 பேர்தான் தூக்குவார்கள். அங்கிருந்து ஒவ்வொரு பிராகாரமாக இறங்கி வீதிக்கு வரும்போது 4 என்பது… 8, 16, 32, 64, 128 என்றபடி, கருடாழ்வாரைச் சுமப்போரின் எண்ணிக்கை அதிகமாகும். வீதி உலா முடிந்து கோயிலுக்குள் வந்து சந்நிதியில் கொண்டுவைக்கும்போதும் அதன்படியே குறைந்து தொடக்கத்தில் இருந்தபடி நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்களாம்.

அப்படிப்பட்ட விசேஷ மூர்த்தியான இவர் அருளும் இத்தலம் மிகவும் விசேஷமானது. வாருங்கள் இத்தலம் குறித்த பிற தகவல்களையும் வழிபாட்டு விசேஷங்களையும் அறிந்துகொள்வோம்.

தலபுராணம்

இங்கே மூலவர் திருநறையூர் நம்பி. உற்சவருக்கு இடர்கடுத்த திருவாளன் என்பது திருநாமம். தாயாரின் திருநாமம் வஞ்சுள வல்லி. இங்கு தல விருட்சம் மகிழ மரம். இங்கு மணிமுத்தா, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன என்கிறது தலபுராணம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கிய ஊர் இது என்று இதைப் போற்றுகிறார்கள். காரணம் இங்கு தாயாருக்குதான் முதலில் அபிஷகம், பிரசாதம் முதலியன. பிறகுதான் பெருமாளுக்கு. எனவேதான் திருநறையூர் என்னும் தலப்பெயர் நாச்சியார் கோவில் என்று ஆனது.

முன்னொருகாலத்தில் மேதாவி என்ற ஒரு மகரிஷி வாழ்ந்துவந்தார். அவர் மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென விரும்பினார். அதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனைகள் செய்தார். அவருடைய பிரார்த்தனைக்கு இரங்கி, மஹாலக்ஷ்மியே அவருக்குக் குழந்தையாக இருக்க விரும்பினார். அதன்படியே அவர் ஒரு நாள், மகிழ மரத்தின் கீழ் அழகான ஒரு பெண் குழந்தையைக் கண்டார். அக்குழந்தைக்கு “வஞ்சுளவல்லி” என்று பெயரிட்டு வளர்த்தார் பெருமாள்.

கல் கருடன்
கல் கருடன்

வஞ்சுளவல்லி வளர்ந்து திருமணப் பருவத்திற்கு வந்தாள். அப்போது ஸ்ரீமஹாவிஷ்ணு வஞ்சுளவல்லியைக் கைத்தலம் பற்றுவதற்காக அவ்வூருக்கு வந்தார். ஆனால், ஒருவராக வராமல், வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என்கிற ஐந்து உருவங்களில் அதிதிகளாக வந்தார். அவ்வாறு வந்த அதிதிகளை வரவேற்று விருந்தளித்தார் மேதாவி மகரிஷி. சாப்பிட்டவர்கள் கை கழுவுவதற்குத் தண்ணீர் ஊற்றச் சென்றார் வஞ்சுளவல்லி. எல்லோரும் கையைக் கழுவிக்கொண்டு சென்றுவிட, வாசுதேவன் மட்டும் வஞ்சுளவல்லியின் கையைப் பற்றினார்.

வஞ்சுளவல்லி கூக்குரலிட்டார். மேதாவி மகரிஷி ஓடி வந்து பார்த்தபோது ஐவரையும் காணவில்லை. அங்கே மஹாவிஷ்ணு மட்டும் வஞ்சுளவல்லியின் கையைப் பிடித்த கோலத்தில் சேவை சாதித்துக்கொண்டு நின்றார். தம்முன் மஹாவிஷ்ணுவே நிற்பதைக் கண்ட மேதாவி தன்னுடைய பாக்கியத்தை எண்ணி ஆனந்தம் அடைந்தார். அப்போது பகவான் மேதாவியைப் பார்த்து அவர் பெண்ணைத் தமக்குக் கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டினார்.

மேதாவியும் இசைந்து சில நிபந்தனைகளை விதித்தார். தமக்கும் அவ்வூர் மக்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என்றும், திருமணம் ஆனாலும் தாம் அன்போடு செல்லமாக வளர்த்த பெண்ணுக்கே எல்லா முன்னுரிமைகளும் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பெருமாளும் இசைந்து வஞ்சுளவல்லியை மணம் புணர்ந்தார்.

அன்றுமுதல் தாயாருடன் அவ்வூரிலேயே கோயில் கொண்டு எழுந்து அருளினார் பெருமாள். கர்ப்ப கிரகத்தில் தாயார் ஓர் அடி முன்னால் நிற்க, பெருமாள் மற்ற வியூக மூர்த்திகளுடன் சேவைசாதிக் கின்றார். இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கல்கருடன்

இத்தலத்தின் விசேஷமான கல்கருடன் குறித்த ஒரு செய்தியும் தலபுராணத்தில் உண்டு.

இவ்வூரின் அருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு சிற்பி கல்லினால் கருடனைச் செதுக்கி, சிறகுகளை அமைத்து பிராணப் பிரதிஷ்டை செய்தபோது அந்தக் கல்கருடன் திடீரென்று பறக்க ஆரம்பித்துவிட்டதாம்.

அதைக்கண்ட சிற்பி ஒரு கல்லை வீச, அது கருடனின் அலகைத் தாக்க, கருடன் இந்த இடத்தில் விழுந்ததாம். பெருமாள் கருடனை இங்கேயே இருக்க வரம் அளித்துத் தன் சந்நிதிக்கு அருகிலேயே ஓர் இடமும் கொடுத்தாராம். இந்த கருடனை வியாழக்கிழமைகளில் வழிபடுவது விசேஷம் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.

நாச்சியார்கோவில் பெருமாள் தாயார்
நாச்சியார்கோவில் பெருமாள் தாயார்

கருடனுக்கு தினமும் அமிர்தக் கலசம் எனும் ஒருவகை மோதகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த மோதகத்தைச் சாப்பிட்டால் குழந்தை வரம் கிட்டும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

மேலும் இங்கே பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்யப்படும் அதிமதுர பாயச நிவேதனம் விசேஷமானது. அதை உண்டால் சகல சுபிட்சங்களும் கிடைக்கும் என்பார்கள்.

மார்கழி பிரம்ம உற்சவத்தின் நான்காவது நாளன்று மாலை கல்கருட சேவை உற்சவம் நடைபெறும். அன்று வஞ்சுளவல்லித்தாயார் அழகிய அன்னவாகனத்தின் மீது முதலில் எழுந்தருள, அவருக்குப் பின்னால் ஸ்ரீநிவாசன் கல் கருடன்மீது அமர்ந்து நாச்சியார் கோயில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கருட சேவையின்போது பெருமாளைத் தாங்கிக் களித்து உலா வருவதால் கல்கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் நாம் தரிசிக்க முடியும்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இந்தத் திருத்தலத்துக்கு ஒருமுறை சென்றுவந்தால் வாழ்வில் வசந்தங்கள் கூடும். நலமும் வளமும் சேரும் என்கிறர்கள் பக்தர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *