• September 29, 2025
  • NewsEditor
  • 0

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் தவெக, பாஜக கட்சிகளும் நிவாரணம் அறிவித்திருக்கின்றன.

கரூர் மருத்துவமனை

இந்த சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஆதவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay Karur Stampede – ஆதவ் அர்ஜுனா சொல்வதென்ன?

அவரது பதிவில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்.

இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளன. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளன இந்த மரணங்கள்.

இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்தக் குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்தக் குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.

துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!’ எனக் கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *