நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் மற்றும் மத்திய அரசு சார்பில் 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல மருத்துவமனையில் தீவிரசிகிச்சையில் இருப்பவர்களுக்கு முறையே, 1 லட்சம், 2 லட்சம் மற்றும் 50,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவே சென்னை திரும்பிய விஜய்யின் சென்னை நீலங்கரை இல்லத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிப்பதன் பகுதியாக மலையாள நடிகர் மம்முட்டி இந்த நிகழ்வால் சோகமடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைத்தள பதிவில், “கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































