
சென்னை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, சிலையை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில் அக்டோபர் மூன்றாம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாநகரில், மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலையின் பீடத்தையும், கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தி, மேற்படி சிலையை திருடிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், விடியா திமுக அரசை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 3ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில், திருவண்ணாமலையில் அகற்றப்பட்ட அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.