
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்.எம்.பி-யுமான திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் கூட்டம் கூடுகிறது. ஆனால் தவெக கூட்டத்தில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பு பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
விஜய் இருக்கும் பகுதிக்கு முந்திக்கொண்டு செல்கிறார்கள். இதனால் ஏற்படுகின்ற நெரிசல், இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, இது போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவர்கள், அவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பேரணி நேரம், உரையின் கால அளவு ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும்.
களத்துக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானாலும், கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால், கடுமையான நெரிசல் ஏற்படும். எனவே தொடங்குகிற போதே உரிய நேரத்தில் தொடங்கி, அடுத்தடுத்து திரண்டு வரக்கூடியவர்களை கட்டுப்படுத்தலாம்.
எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில், லட்சக்கணக்கானவர்களைத் திரட்டி பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்பது நமக்குதான் தெரியும். காவல்துறைக்குக்கூட யூகம்தான் இருக்கும்.

நாம் கூட்டம் நடத்தக் கேட்கும் இடத்தை, மக்கள் கூடும் கூட்டத்தின் அடிப்படையில் ஒதுக்குவார்கள். இதுதான் கடந்த காலங்களில் நாம் அறிந்த ஒன்று.
நம்மை நோக்கி எத்தனை லட்சம் பேர் நம்மை நோக்கித் திரள்வார்கள் என்பதையும், ஒரே இடத்தில் அவ்வளவு பேரையும் நீண்ட நேரம் நிற்க வைக்க முடியுமா? அப்படி கூடினால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் எல்லாவற்றிலும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர் அதற்கான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்பது நான் கற்றுக் கொண்ட பாடம். துயரத்தில் உறைந்து கொண்டிருக்கும் போது, இவர்தான் காரணம், அவர் தான் காரணம் என குற்றம் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை.
இதை விசாரிப்பதற்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே என்ன பிரச்னைகள்? இந்த பாதிப்பிற்கு பின்னணி காரணம் என்ன? என்பது குறித்து இந்த ஆணையம் விரிவான விசாரணை நடத்தும் என நம்புகிறேன்.
அந்த அறிக்கையை அடுப்படையாகக் கொண்டு, பின்வரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதம் நடக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் தான், காவல்துறை சில நிபந்தனைகளை விதிக்கிறது.
அதற்கு உட்பட்டு நாம் செயல்பட்டால், ஓரளவுக்கு பாதிப்புகளை தவிர்க்க முடியும். தொடக்கத்தில் நாங்களும் காவல்துறைக்கு எதிராகப் பேசியிருக்கிறோம். ஆனால் இதுபோன்ற பெரும் திரளைத் திரட்டுகிற போது, காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம்.
பாதுகாப்பு வழங்குவதற்கு காவல் துறை தவறிவிட்டது என்று போகிற போக்கில் சொல்லி விட முடியாது. வருத்தம் தெரிவித்திருக்கும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் செல்வார் என்று நம்புகிறேன்.’ என்றார்.