• September 28, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ” நேற்று 27.09.2025 (சனிக்கிழமை) மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் 38 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்தில் வேதனை அடைகின்றோம்.

கரூர் மருத்துவமனை

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறவும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

மக்களிடம் பிரபலமான, மக்களால் விரும்பப்படுகின்ற தலைவர்கள் இது போன்ற கூட்டங்களை நடத்தும்போது 3 விதமான பாதுகாப்புகளையும் கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

1. கூட்டம் நடத்துகின்ற கட்சிகள் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் தொண்டர்களில் உள்ள கட்டுப்பாடான நபர்களை வைத்து ஒழுங்குபடுத்தவும் காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்று அந்தப் பாதுகாப்புப் பணிகள் தகுந்தாற்போல் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

விஜய் பிரசாரம் கரூர்
விஜய் பிரசாரம் கரூர்

2. காவல்துறையும் அனுமதி கொடுப்பதோடு நின்றுவிடாமல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கூட்டம் சேர்ந்த பிறகு ஒரு பகுதியில் கட்டுப்படுத்தினால், அவர்கள் எங்கு போவது என்று தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்து முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கக்கூடும்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிக கூட்டம் சேராமல் கவனத்துடன் கட்டுப்படுத்த வேண்டும்.

3. கூட்டத்திற்கு வருகிற பொதுமக்களும் என்ன மாதிரியான கூட்டம், அதற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்பதை அவர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

விஜய் போன்ற பிரபலங்கள் இது போன்ற பிரச்சாரங்களுக்கு முதல் முறையாக வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.

எனவே இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.

அப்படியே வந்தாலும் அவர்களைப் பாதுகாப்பாக ஒரு ஓரமாகவோ அல்லது நெரிசலோ தள்ளுமுள்ளோ ஏற்படும்போது பாதுகாப்பாக வெளியேற வழி உள்ள இடத்தில் நிற்க வைக்க வேண்டும்.

film employees federation of south india
film employees federation of south india

நடந்து முடிந்த வேதனையான நேரத்தில் அறிவுரை கூறுவதாக நினைக்காதீர்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் இதுவே கடைசியுமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு அவர்கள் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *