• September 28, 2025
  • NewsEditor
  • 0

சல்மான் கானை விமர்சித்த விவேக் ஓபராய்

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் காதல் அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானுடன் சண்டையிட்டு பிரிந்த பிறகு, சில காலம் நடிகர் விவேக் ஓபராயுடன் ஐஸ்வர்யா ராய் காதல் உறவில் இருந்தார்.

இதனால் 2003ஆம் ஆண்டு நடிகர் விவேக் ஒபேராய் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சல்மான் கானை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு பாலிவுட்டில் விவேக் ஒபேராய் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த அனுபவம் குறித்து யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவேக் ஓபராய் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தந்தையுடன் விவேக் ஓபராய்

சமீபத்திய அந்த நேர்காணலில், ”இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது, சிரிப்புதான் வருகிறது. அந்த சம்பவத்தைப் பற்றி இப்போது எனக்கு கவலையில்லை.

ஆனால் அப்போது, நான் திரையுலகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். எனக்கு நடந்த நினைவுகள் இப்போது நினைவில் இல்லை. ஆனால் அந்த சம்பவங்களால் எனது தாயாரின் கண்ணீரை நிறுத்துவது எனக்கு கடினமாக இருந்தது.

அந்த நினைவுகள் அனைத்தும் எதிர்மறையான நினைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அவற்றை விட்டுவிடுவதே சிறந்தது.

அதிக அளவில் மிரட்டல்

சல்மான் கானுக்கு எதிராகப் பேசியபிறகு எனக்கு அச்சுறுத்தல் வந்தது. அதோடு நான் ஒப்புக்கொண்ட பல படங்களில் இருந்து நீக்கப்பட்டேன்.

எனது குடும்பத்திற்கும் பல வழிகளில் அச்சுறுத்தல் வந்தது. ஒரு கட்டத்தில் என்னை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

சல்மான் கான்
சல்மான் கான்

என்னுடன் யாரும் பணியாற்றத் தயாராக இல்லை. அதிக அளவில் மிரட்டல் போன் கால்கள் வந்துகொண்டிருந்தன. இது எனது சகோதரி, தந்தை, தாயாருக்கும் கூட வந்தது.

அதுமட்டுமின்றி, எனது தனிப்பட்ட வாழ்க்கை முற்றிலும் குழப்பத்தில் இருந்தது. நான் மனஅழுத்தத்திற்கு ஆளானேன். நான் என் அம்மாவிடம் சென்று நிறைய அழுதேன். எனக்கு மட்டும் ஏன் என்று கேட்டேன்.

அதற்கு நீ விருதுகளை வெல்லும்போதும், படங்கள் எடுக்கும்போதும், ரசிகர்களால் பின்தொடரப்படும்போது எப்போதாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறாயா என்று என்னிடம் அம்மா கேட்டார்” என்று தெரிவித்தார்.

புறக்கணிப்பால் உருவான ரூ.1200 கோடி

பாலிவுட்டில் விவேக் ஒபேராய் புறக்கணிக்கப்பட்டதால் தனக்கான ஒரு தொழிலை விவேக் ஓபராய் உருவாக்கிக்கொண்டுள்ளார்.

அவரது தந்தை சுரேஷ் ஒபேராய் வழிகாட்டுதலின் பேரில் இப்போது துபாயில் ரூ.1200 கோடி மதிப்பிலான தொழில்களை விவேக் ஓபராய் செய்து வருகிறார்.

பணக்கார குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், சிறு வயது முதலே தன்னிச்சையாக வளர வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் என்று விவேக் ஓபராய் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவேக் ஓபராய் கூறுகையில்,”நான் 10 வயதாக இருந்தபோதே வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்திருக்கிறேன். எனவே நான் 10 வயதிலிருந்தே வியாபாரத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

எனது தந்தை என்னிடம்,”நான் ஒரு பணக்காரன்; நீ பணக்காரன் அல்ல. நீ அங்கு செல்வாய், ஆனால் அதை நீயே செய்ய வேண்டும்” என்று கூறுவார்.

விவேக் ஓபராய்
விவேக் ஓபராய்

அந்த வளர்ச்சி அனுபவம் எனது எதிர்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. நான் 19 வயதாக இருக்கும்போதே பங்குச்சந்தையில் நுழைந்தேன். அதில் 3 மில்லியன் டாலர் அளவுக்குத் திரட்டினேன்.

எனது 23 வயதில் அக்கம்பெனியை விற்பனை செய்தது எனது வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

நான் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்காவிட்டால், இது ஒருபோதும் சாத்தியமில்லை. நான் அந்த வேலையில் ஈடுபட்டதால், இப்போது இந்தியப் பங்குச் சந்தையில் ஒன்பது நிறுவனங்களைக் கொண்டு வர முடிந்தது. மேலும் நான்கு நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

விவேக் ஓபராய் ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, நிதித்துறையில் சாதித்து வருகிறார். அனைத்தும் பாலிவுட்டில் புறக்கணிக்கப்பட்ட பிறகுதான் நடந்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *