
கரூரில் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கரூர் வந்தார்.
அங்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
“நேற்று மாலை கரூரில் நடந்த சம்பவம் மிக மிக துயரமான சம்பவம். இந்த மாதிரியான சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அரசு முழு பாதுகாப்பு வழங்கியும், இப்படியொரு கோர விபத்து நடந்திருக்கிறது. பலரை இழந்திருக்கிறோம்.
ஏற்கெனவே முதலமைச்சர் இந்த செய்தியைக் கேள்விபட்டதும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை, பக்கத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து அமைச்சர்களையும் உடனடியாக இங்கே வர வைத்தார்.
உயிரிழப்பு புள்ளிவிவரம்
முதலமைச்சரால் இந்தச் சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நான்கு நாள்கள் ஓய்விற்காக வெளிநாட்டில் இருந்தேன். எனக்கு போன் செய்து, மிகுந்த வேதனையுடன் முதலமைச்சர் பேசினார்.
மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் 17 பேர், ஆண்கள் 13 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர். இதில் 32பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள், 2 பேர் திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள், ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர்.
மருத்துவர்களிடம் தனித்தனியே பேசினேன்
30 பேரின் உடல் பிரேத பரிசோதனை முடித்து உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 9 பேருக்கு பிரேத பரிசோதனை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மணிநேரத்தில் ஒப்படைக்கப்படும்.
அரசு எப்போதுமே அவர்களுடன் நிற்கும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், அவர்களது இழப்பிற்கு அளவீடே கிடையாது.
ஐ.சி.யூவில் சிகிச்சை பெறுபவர்களிடமும் பேசியிருக்கிறேன். இங்கு இருக்கும் ஒவ்வொரு மருத்துவரிடமும் தனித்தனியே சந்தித்து சிகிச்சை சம்பந்தமாக கேட்டறிந்திருக்கிறேன். இதை முதலமைச்சரிடம் அப்டேட் செய்ய இருக்கிறேன்.

எத்தனை மருத்துவர்கள்?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும், சேலத்தை சேர்ந்த 30 மருத்துவர்கள், நாமக்கல்லைச் சேர்ந்த 9 மருத்துவர்கள், மதுரையைச் சேர்ந்த 49 மருத்துவர்கள், செவிலியர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த 22 மருத்துவர்கள், புதுக்கோட்டையில் இருந்து 3 மருத்துவர்கள், கோவையில் இருந்து 7 மருத்துவர்கள், திருச்சியில் இருந்து 25 மருத்துவர்கள் இப்போது பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மொத்தம் கரூரில் 200 மருத்துவர்களும், பிற மாவட்டங்களில் இருந்து 145 மருத்துவர்கள் மொத்தம் 345 மருத்துவர்கள் தற்போது பணியில் இருக்கின்றனர்.
அருணா ஜெகதீசன் வருகை
கரூர் மாவட்ட ஆட்சியரோடு சேர்ந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனிமேல் இந்த மாதிரியான சம்பவம் நடக்கக்கூடாது. அதற்கேற்ற மாதிரி இந்த அரசு செயல்படும்.
எனக்குக் கிடைத்த தகவலின்படி, மதியம் 1 -1.30 மணியளவில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆய்விற்காக இங்கே வரவிருக்கிறார். அவரது அறிக்கைக்கு பிறகு சட்ட ரீதியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்”.