
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்டம் நடந்த பகுதியில் இருக்கும் நம் செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த செழியன், “விஜய்யை பார்த்தே ஆவேன்னு என் பையன் நேத்து மதியம் இங்க வந்துட்டான். கூட்டத்துல சிக்கி அவனும் ரொம்ப சிரமப்பட்டிருக்கான்.
எப்டியோ தப்பிச்சு வீட்டுக்கு வந்துட்டான். நைட்டு முழுக்க அழுதுக்கிட்டே இருந்தான். அவன் பார்த்த காட்சிகள் அவ்வளவு கொடுமையா இருந்துருக்கு. எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல ஒரு பொண்ணு. ஐ.டி யில வேலை பார்க்குது.
என் தலைவனை பார்த்தே ஆகணும்னு அந்தப் பொண்ணோட அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு வந்துருச்சு. அந்த அம்மாவுக்கு 65 வயசு. கூட்டத்துல அந்த அம்மாவுனால தாக்குப் பிடிக்க முடியல. மூச்சுத்திணறி இறந்துருக்கு. அந்த அம்மாவோட உடலைக் கண்டுபிடிக்கிறதே ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதேமாதிரி, நிறைய பேரோட உடல கண்டுபிடிக்கவே முடியல…” என உடைந்த குரலில் பேசினார்.