• September 28, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: நான் 50 வயது பெண். எனக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவரை சந்தித்தேன். இசிஜி பரிசோதனையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும், ட்ரோபோனின் என்ற பரிசோதனை செய்யச் சொன்னார்கள். இசிஜி நார்மல் என்ற நிலையில், இந்த டெஸ்ட் எதற்கு, இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒரு நபருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவரை அணுகும்போது முதலில் இசிஜி பரிசோதனை செய்யப்படும்.  அதையடுத்து ட்ரோபோனின் பரிசோதனை செய்யச் சொல்வோம். ட்ரோபோனின் என்பது நம் இதயத்தின் தசைகளில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.

இதயத்தின் திசுக்கள் பாதிக்கப்படும்போது அல்லது  உடலில் உள்ள செல்கள் அல்லது திசுக்கள் எதிர்பாராத விதமாக அல்லது முன்கூட்டியே இறந்து போகும் ‘நெக்ரோசிஸ்’ நிலையில் இந்தப் புரதமானது, ரத்தத்தில் கலக்கும்.

இதில்  ட்ரோபோனின் I (Troponin I) மற்றும்  ட்ரோபோனின் T (Troponin T) என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டில் எந்த வகை ட்ரோபோனின் புரதமானாலும் சரி, அது ரத்தத்தில் கலக்கும்போது மிக நுண்ணிய அளவு, அதாவது நானோகிராம் அளவில் இருந்தாலும்கூட இப்போது ஸ்ட்ரிப் டெஸ்ட் என்ற பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.

 மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.
மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம்.

நெஞ்சுவலி ஏற்படும்போது, இசிஜி பரிசோதனையில் நார்மல் என்று காட்டினாலும், ட்ரோபோனின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த நபரை மருத்துவமனையில் அட்மிட் செய்து கண்காணிப்போம். 

இசிஜி பரிசோதனையில் மாறுதல்கள் தென்பட்டாலும் ட்ரோபோனின் பரிசோதனை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

ட்ரோபோனின் அளவு அதிகம் என்று தெரியவரும்போது அந்த நபருக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதற்கான அலெர்ட் மெசேஜாகவும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ட்ரோபோனின் அளவானது, ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

நெஞ்சுவலி
நெஞ்சுவலி

ட்ரோபோனின் புரதமானது 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை ரத்தத்தில் இருக்கும். அதன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கும்போது, ஹார்ட் அட்டாக் ரிஸ்க்கை தெரிந்துகொள்வதும் எளிதாகிறது. மற்ற நேரங்களில் ட்ரோபோனின் பரிசோதனை அவசியப்படுவதில்லை.

நெஞ்சுவலி ஏற்படும்போதுதான் அது கவனம் பெறுகிறது. மருத்துவர் அதைச் செய்ய அறிவுறுத்தும்போது அலட்சியம் செய்ய வேண்டியதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *