
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் பகுதியில் பரப்புரை நடத்தினார்.
30,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் கூட்டம் அதிகளவில் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்தும், நடிகரும் ம.நீ.ம கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து கமல் ஹாசன், “நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்,” எனப் பதிவிட்டிருக்கிறார்.