• September 27, 2025
  • NewsEditor
  • 0

கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், சிலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் கரூரில் பேசிக்கொண்டே இருக்கும்போது விஜய்யின் வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழ, விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார். மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, தாமதமாக வந்த விஜய் நேரமில்லாமல் விரைந்து பேச்சை முடித்துவிட்டு, பேப்பரில் இருந்ததை வேக வேகமாக வாசித்துவிட்டு தனது பிரசார பேச்சை முடித்துக்கொண்டார்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்

விஜய் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மயங்கியவர்களை மீட்டுச் செல்ல கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தின் நடுவே தள்ளு முள்ளும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், பலரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே சிலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக அமைச்சர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னையிலிருந்து கரூர் சென்றுகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நடந்த மோசமான இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களிடம் பேசினோம்.

அவர், “33பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அதில் குழந்தைகள் 6 பேர் குழந்தைகள், 16 அல்லது 17 பெண்கள். 40 லிருந்து 50 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கின்றனர். மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் மிகக்குறைவு, பெரும்பாலும் ஆம்புலன்ஸில் வரும் வழியிலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல் | கரூர் மருத்துவமனை
விஜய்யின் கரூர் பிரசார நெரிசல் | கரூர் மருத்துவமனை

சிகிச்சையை விரைவுப்படுத்தி, தீவிரப்படுத்த நிறைய மருத்துவர்களை கரூர் மருத்துவமனைக்கு வரவழைத்திருக்கிறோம். திருச்சியிலிருந்து 24 பேர், சேலத்தில் 20, திண்டுக்கலில் 20 மருத்துவர்கள் என மருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு, தனியார் மருத்துவமனை இரண்டிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு உடனடியாக சென்றுகொண்டிருக்கிறேன். விமானம் கிடைக்காததால் காரிலேயே கரூர் செல்கிறேன்.” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மா.சு.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *