
நவீனத் தமிழ் இலக்கியத்தில், மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கி வந்த ரமேஷ் பிரேதன் (61) உடல் நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் காலமானார்.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் விரிவாகவும் நுட்பமாகவும் புதுமைகளை எழுதிப் பார்த்தவர். பிரேமுடன் இணைந்து 21 நூல்களை எழுதிய ரமேஷ் பிரேதன், கவிதை, நாவல் வகைமைகளில் 12 நூல்களைத் தனித்தும் எழுதியுள்ளார். நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு தமிழும் இலக்கியமுமே காலமும் வெளியுமாக இருந்தன.
‘நல்ல பாம்பு’, ‘மரணத்தின் பரிணாமம்’, ‘அவள் பெயர் சொல்’, ‘பன்றிக் குட்டி’, ‘சாராயக் கடை’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ரமேஷ் பிரேதன்.
அண்மையில், விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதை ரமேஷ் பிரேதனுக்கு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நீண்ட காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த ரமேஷ் பிரேதன், தனது 61வது வயதில், இன்று புதுச்சேரியில் காலமானார். இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.