
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களத்திற்கு வந்தது அ.தி.மு.க மட்டுமே, எல்லா தலைவர்களும் கூட்டணி கட்சிகளைப் பற்றி கவலைப்படுகின்ற நேரத்தில் மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்திற்கு வந்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமையும். இன்னும் காலம் இருக்கிறது.
கடைசி நேரத்தில் கூட கூட்டணிக்குள் சில கட்சிகள் வரலாம். வரும் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது தி.மு.கவுக்கும், த.வெ.க.விற்கும் இடையே இரண்டாவது இடத்தை பிடிப்பது யார்? எதிர்க்கட்சியாக யார் வருவார்கள் என்றுதான் போட்டி நிலவுகிறது. டி.டி.வி தினகரனின் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பது போல அ.தி.மு.க ஆட்சியின் நன்மையை மக்கள் தற்போது புரியத் தொடங்கி உள்ளனர். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக வரும் 2026 தேர்தல் இருக்கும்.
தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்லப்பெருந்தகை, தி.மு.கவின் தவறை சுட்டிக்காட்டவில்லை. காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு விசாரனை ஓராண்டைக் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை, கொலைக்கான காரணமும் கண்டுபிடிக்கவில்லை.

அதையெல்லாம் கேட்காத செல்வபெருந்தகைக்கு அ.தி.மு.க பற்றி பேச தகுதி கிடையாது. காங்கிரஸ் கட்சியை தி.மு.க விழுங்கப் பார்க்கிறது என அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில், கரூரில் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கவிதாவை தி.மு.கவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்” என்றார்.