• September 27, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். தேனுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் என அழைக்கப்படும் இக்கோயிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. துர்க்கை அம்மனுக்கு தினமும் ஒரு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

பண அலங்காரத்தில் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

இது குறித்து பக்தர்கள் சிலரிடம் பேசினோம். “கடந்த 22ம் தேதி முதல் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000, 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்து அம்மனின் உடல் முழுவதும் சாத்தி அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனர். குறிப்பாக சாமிக்கு இது போல் பணம் மூலம் அலங்கரிப்பது வழக்கம். பல கோயில்களில் இது செய்யப்பட்டுள்ளது. எப்போதும், எங்கும் புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் தான் சாமிக்கு அலங்காரம் செய்வார்கள். அந்த பணம் கோயிலுக்கு வரும் உபயதாரர்கள் கொடுப்பார்கள்.

ஆனால், துர்க்கை அம்மனுக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய பணத்தில் அலங்காரம் செய்துள்ளனர். இந்த பணத்தை கொடுத்த உபயதாரர் யார், அலங்காரம் செய்வதற்கு அனுமதி கொடுத்தது யார் என பல கேள்விகள் வருகிறது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சமயத்தில் கோயில் கணக்கில் இருந்த அந்த பணம் முழுவதும் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக அந்த சமயத்தில் கோயில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். அப்படியிருக்கையில், இந்த பணம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது கிடையாது என்பது தெரிகிறது.

கோயில்

இது போல் பணத்தில் அலங்காரம் செய்யும் போது அந்த பணம் பூஜை முடிந்ததும் கோயில் கணக்கில் ஏற்றப்படும். அலங்கரிப்பதற்கு சுமார் ரூ.15,000 வரை பயன்படுத்தியுள்ளனர். செல்லாத இந்த பணத்தை என்ன செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. கோயில் நிர்வாகம் மற்றும் குருக்களின் இந்த செயல் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லாத கருப்பு பணம் வைத்திருந்தது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். அப்படி என்றால் பணத்தை வைத்திருந்து கொடுத்தது யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து கோயில் நிர்வாக தரப்பில் கேட்டதற்கு, பழைய பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்து விட்டதாக சொல்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *