
சென்னையில் நடைபெற்ற சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “தவெக தலைவர் விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டிருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசை என்று பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிக் கொண்டிருகிறார். இந்தப் பக்கம் எம்ஜிஆரையும், அந்தப் பக்கம் அண்ணாவையும் வைத்துள்ளார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது? இது ஒரு சனியன், அது ஒரு சனியன் என்று இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார்.” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து சீமான், விஜய்யை மட்டுமல்லாமல் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் விமர்சித்துவிட்டார் என சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.
இந்நிலையில் சீமானின் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக எப்போதும் நட்பை மதிக்கும்.. நட்புக்கு தலை வணங்குவோம். ஆனால் மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிக்கும் போது, ஏற்கனவே பலரும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஏன் சீமானுக்கு அடிக்கடி இப்படி ஆகிறது என்று தெரியவில்லை.
சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். சிலருக்கு அஷ்டம சனி இருக்கும்..ஏழரை சனி கூட இருக்கும்.. இந்த மாதிரி சனிகளில் எத்தனையோ விதம் இருக்கு. எல்லா சனியும் ஒன்றுசேர்ந்த உருவம்தான் சீமான்.

நண்பர் சீமான் மறைந்த தலைவர்கள் பற்றி கொச்சையாக பேசினால், எங்களின் பதிலடி வேறு மாதிரி இருக்கும். அவரைவிட கொச்சையாக பேசுவதற்கு அதிமுகவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று சீமானை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் ஜெயக்குமார்.